Wednesday, November 1, 2023

சகுந்தலா தேவி-விஞ்ஞானி


Shakuntala Devi

சகுந்தலா தேவி அவர்கள், ஒரு இந்திய பெண் கணிதமேதையாவார். சாதாரண குடும்பத்தில் பிறந்த அவர், கம்ப்யூட்டர், கால்குலேட்டர் போன்ற இயந்திரங்களைத் தோற்கடிக்கும் வேகத்தில் கேள்விகளுக்கு விடையளிக்கும் திறமைப் படைத்தவராக விளங்கியவர். தன்னுடைய கணிதத் திறமையை வெளிப்படுத்தி, உலக சாதனை புத்தகமாகக் கருதப்படும், “கின்னஸ் புத்தகத்தில்” இடம்பிடித்தவர். சாதாரண குடும்பத்தில் பிறந்து, கணிதவியலில் வியக்கத்தக்க சாதனைகளைப் படைத்த சகுந்தலா தேவியின் வாழ்க்கை வரலாறு மற்றும் சாதனைகளை விரிவாகக் காண்போம்.

பிறப்பு: நவம்பர் 04, 1939

இடம்: பெங்களூர், கர்நாடகா

இறப்பு: ஏப்ரல் 212013

பணி: கணிதமேதை, ஜோதிடர்

நாட்டுரிமை: இந்தியா

பாலினம்: பெண்

பிறப்பு:

இந்திய பெண் கணிதமேதையான சகுந்தலா தேவி அவர்கள், 1939 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 04  ஆம் நாள் இந்தியாவின் கர்நாடகா மாநிலத்திலுள்ள பெங்களூரில் ஒரு பிராமண குடும்பத்தில் பிறந்தார். இவருடைய தந்தை ஒரு சர்கஸில் வேலைப்பார்த்து வந்தார்.

ஆரம்ப வாழ்க்கை:

சகுந்தலா தேவி அவர்கள், தன்னுடைய மூன்று வயதிலேயே, தன் தந்தையுடன் சீட்டு வித்தைகள் செய்து, அவருடைய கணிதத் திறமையை வெளிப்படுத்தினார். ஆறுவயதில், மைசூர் பல்கலைக்கழகத்திலும் மற்றும் எட்டு வயதில் ,அண்ணா பல்கலைக்கழகத்திலும் கணக்கு மற்றும் நினைவாற்றல் திறமையை வெளிப்படுத்தி, அனைவரையும் வியக்க வைத்தார்.

சகுந்தலா தேவியின் கணிதத் திறமை:

சகுந்தலா தேவி அவர்கள், 1977 ஆம் ஆண்டு 201க்கு ‘23’கனமூலத்தை மனதில் நினைத்தே கூறினார். பிறகு, ஜூன் 18, 1980ல் “லண்டனிலுள்ள இம்பீரியல் கல்லூரியில்” நடந்த ஒரு நிகழ்ச்சியில் இரண்டு 13 இல்லக்க (அதாவது 7,868, 369,774,870 * 2,465,099,745,779  = 18.947.668.177.995.426.462.773.730)  எண்களை பெருக்கி வெறும் 28 வினாடிகளில் கூறி உலகையே வியக்க வைத்தார். இந்த விடை, 26 இலக்கங்கள் கொண்ட ஒரு எண் ஆகும். இது உலக சாதனையாக, ‘கின்னஸ் புத்தகத்தில்’ இடம் பெற்றுள்ளது.

சகுந்தலா தேவி எழுதிய நூல்கள்:

தன்னுடைய கணிதத் திறமையின் மூலம் புகழ் பெற்ற சகுந்தலாதேவி அவர்கள், அனைவரும் ஏற்கும் வகையில் படித்து, பயன்பெற கணிதவியலைப் பற்றி பல நூல்களை எழுதியுள்ளார்.

  • ‘புக் நம்பர்ஸ்’,
  • ‘பெர்ஃபெக்ட் மர்டர்’,
  • ‘ஃபிங்கரிங்: தி ஜாய் ஆஃப் நம்பர்ஸ்’,
  • ‘இன் தி வொண்டேர்லாண்ட் ஆஃப் நம்பர்ஸ்’,
  • ‘அஸ்ட்ராலஜி ஃபார் யூ’

போன்றவை இவருடைய புகழ்பெற்ற புத்தகங்கள் ஆகும்.

இறப்பு

சகுந்தலா தேவி அவர்களுக்கு, சிறுநீரகக் கோளாறும், சுவாசப் பிரச்சனைகளும் இருந்ததால், பெங்களூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி, ஏப்ரல் 3 ஆம் தேதி, 2013 ஆம் ஆண்டில், தனது 83 வது வயது மரணமடைந்தார்.

‘ஹ்யூமன் கம்ப்யூட்டர்’ அதாவது ‘மனித-கணினி’ என புகழப்படும் சகுந்தலா தேவி அவர்கள், உலகின் பல நாடுகளுக்கு சென்று, தன்னுடைய கணிதத் திறமையை வெளிப்படுத்தி, சாதனைகள் படைத்ததோடு மட்டுமல்லாமல், நமது பாரத நாட்டிற்கும் பெருமையைத் தேடித் தந்திருக்கிறார்.

வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன்-விஞ்ஞானி



Venkataraman-Ramakrishnan

தமிழ்நாட்டில் பிறந்த, அமெரிக்கா இந்தியரான சர்.வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன், இங்கிலாந்தில் கேம்பிரிட்ஜில் உள்ள மருத்துவ ஆய்வு கழகத்தில் மூத்த விஞ்ஞானியாகவும் பணியாற்றியவர். ‘உயிர்களின் மூலச்செயல்பாடுகள் எவ்வாறு இயங்குகின்றன’ என்பதை கண்டறிந்ததற்காக, 2009 ஆம் ஆண்டு வேதியியலுக்கான ‘நோபல் பரிசு’ இவருக்கு வழங்கப்பட்டது. இத்தகைய உலகம் போற்றும் தமிழ் மனிதனின் வாழ்க்கை வரலாற்றைப் பற்றி விரிவாக காண்போம்.

பிறப்பு: 1952  

இடம்: சிதம்பரம், கூடலூர் மாவட்டம் (தமிழ்நாடு)

பணி: கட்டமைப்பு சார்ந்த உயிர்நூல் அறிஞர்

நாட்டுரிமை: அமெரிக்கா

பிறப்பு:

வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் அவர்கள், 1952 ஆம் ஆண்டு சி.வி. ராமகிருஷ்ணனுக்கும், ராஜலக்ஷ்மிக்கும் மகனாக இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்திலுள்ள கடலூர் மாவட்டத்திலிருக்கும் ஒரு சிறிய நகராட்சியான சிதம்பரத்தில் பிறந்தார்.

ஆரம்ப வாழ்க்கை:

வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் அவர்கள், தனது தந்தையின் பணிமாற்றத்தின் காரணமாக, குஜராத்திற்கு இடம்பெயர்ந்தார். இவர் தன்னுடைய ஆரம்ப பள்ளிப்படிப்பை வடோதராவிலுள்ள ஒரு கிறிஸ்துவ பள்ளியில் பயின்றார். பின்னர், தனது இளங்கலைப் படிப்பை பரோடாவில் உள்ள ‘மகாராஜா சாயாஜிராவ் பல்கலைகழகத்தில்’ பயின்று, 1971-ல் இயற்பியலில் இளங்கலைப் பட்டமும் பெற்றார். “நாட்டளவிலான அறிவியல் திறனறி உதவித்தொகை” இவருக்கு கிடைத்ததால், அறிவியலில் ஈடுபாடு பெருகியது.

தன்னுடைய முனைவர் படிப்பை தொடர அமெரிக்கா சென்ற இவர், 1976 ஆம் ஆண்டு அமெரிக்காவில் உள்ள “ஒகையோ பல்கலைகழகத்தில்” இயற்பியலுக்கான முனைவர் பட்டமும் பெற்றார். கலிஃபோர்னியா பல்கலைகழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றிய இவர், உயிரியல் துறையில் ஆர்வம் கொண்டு அதே பல்கலைகழகத்தில் 1978  ஆம் ஆண்டு இளங்கலைப் பட்டமும் பெற்றார்.

திருமண வாழ்க்கை:

சர்.வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் அவர்கள், ‘வேரா ரோசென்பெர்ரி’ என்ற ஒரு குழந்தைப் புத்தகங்கள் எழுதும் பெண்ணை மணந்தார். இவர் 25க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ளார். இவர்களுக்கு தான்யா என்ற மகளும், இராமன் என்ற மகனும் உள்ளனர். தான்யா மருத்துவத்துறையிலும், இராமன் இசைத் துறையிலும் ஈடுபாடு கொண்டவர்களாக உள்ளனர்.

சர்.வெங்கட்ராமன் ராமகிருஷ்ணனின் ஆராய்ச்சிப் பணிகள்:

ராமகிருஷ்ணனின் தாய் மற்றும் தந்தை இருவரும் விஞ்ஞானிகள் என்பதால் இவருக்கும் அத்தகையான தாக்கம் ஏற்பட்டது எனலாம். தன்னுடன் முனைவர் பட்டம் பெற்ற சக தோழர்களான தாமஸ் ஸ்டைட்ஸ், மற்றும் அடா யோனட்ஸ் ஆகியோருடன் சேர்ந்து 1983 முதல் 1995 வரை உயிரணுக்களிலுள்ள “ரைபோ கரு அமிலம்” மற்றும் புரதங்களின் சிக்கலான அமைப்பான “ரைபோசோம்” எனப்படும் செல்களுக்குள் புரதங்கள் உற்பத்தியாவது தொடர்பான ஆய்வுப்பணிகளில் ஈடுபட்டனர். இந்த ஆய்வின் மூலம் ‘நமது உடலின் இயக்கத்திற்கு முக்கிய பங்காற்றும் மரபணுவிலுள்ள ரைபோசோம்கள் எவ்வாறு புரத்தத்தை உற்பத்தி செய்கின்றன மற்றும் உயிர்களின் மூலசெயல்பாடுகள் எவ்வாறு இயங்குகின்றன’ என்பதை விளக்கிக் காட்டினார்.

நோபல் பரிசு:

செல்லின் மிகச்சிறிய மூலகூறான “ரைபோசோம்” பற்றிய சிறப்பான ஆய்வை பாராட்டி, 2009 ஆம் ஆண்டு வேதியியலுக்கான ‘நோபல் பரிசை’, “ராயல் சுவீடிஷ் அகாடெமி ஆஃப் சயன்சு” என்ற அமைப்பின் மூலம் வழங்கப்பட்டது.  இந்த ஆய்வில் பங்காற்றிய சர்.வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன், தாமஸ் ஸ்டைட்ஸ், மற்றும் அடா யோனட்ஸ் மூவருக்கும் பரிசுத் தொகை சமமாக பகிர்ந்தளிக்கப்பட்டது.

விருதுகள் மற்றும் அங்கீகாரங்கள்:

  • கேம்ப்ரிட்ஜிலுள்ள ட்ரினிடி கல்லூரியில் உதவி பெரும் மூத்த ஆய்வாளர்.
  • அமெரிக்க தேசிய அறிவியல் அகாடமியில் ஒரு கௌரவ உறுப்பினர்.
  • மருத்துவத்தில் இவருடைய பங்களிப்பை பாராட்டி ‘லூயிஸ்-ஜீண்டேட் பரிசு’ வழங்கப்பட்டது.
  • 2008 ஆம் அண்டு இந்திய நாட்டு அறிவியல் கழகத்தின் அயல் நாட்டாய்வாளர் பதவி.
  • 2008  ஆம் ஆண்டு பிரிட்டிஷ் உயிர்வேதியில் சொசைட்டி மூலமாக ‘ஹாட்லே பதக்கம்’ வழங்கப்பட்டது.
  • செல்லின் மிகச்சிறிய மூலகூறான “ரைபோசோம்” பற்றிய சிறப்பான ஆய்வைப் பாராட்டி, 2009 ஆம் ஆண்டு வேதியியலுக்கான ‘நோபல் பரிசு’ வழங்கப்பட்டது.
  • இந்தியாவின் இரண்டாவது மிக உயர்ந்த விருதான “பத்ம பூஷன்” விருது 2010  ஆம் அண்டு மத்திய அரசால் வழங்கப்பட்டது.
  • 2011 ஆம் ஆண்டு டிசம்பர் 31ல் பிரிட்டிஷ் அரசு, ‘சர் பட்டம்’ வழங்கி கௌரவித்தது.

காலவரிசை:

1952 –  கடலூர் மாவட்டத்திலுள்ள சிதம்பரத்தில் (தமிழ்நாடு) பிறந்தார்.

1971 – இயற்பியலில் இளங்கலைப் பட்டம் பெற்றார்.

1976 –  ஓஹியோ பல்க்கலைகழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார்.

1983 – 1995: ப்ரூக்ஹவேன் தேசிய ஆய்வு கூடத்தில் ரைபோசோம்கள் பற்றிய ஆய்வைத் தொடர்ந்தார்.

1995 –  யூட்டா பல்கலைக்கழகத்தில் உயிரியில் பேராசிரியராக பணியாற்றினார்.

1999 –  ரைபோசோம்களைப் பற்றிய ஆய்வறிக்கை வெளியிடப்பட்டது.

2007 – மருத்துவத்தில் இவருடைய பங்களிப்பிற்காக ‘லூயிஸ்-ஜீண்டேட் பரிசு’ வழங்கப்பட்டது.

2008 – பிரிட்டிஷ் உயிர்வேதியில் சொசைட்டி மூலமாக ‘ஹாட்லே பதக்கம்’ வழங்கப்பட்டது.

2009 – “ரைபோசோம்” பற்றிய ஆய்வுக்காக வேதியியலுக்கான ‘நோபல் பரிசு’ வழங்கப்பட்டது.

2010 – அறிவியலில் இவருடைய பங்களிப்பிற்காக “பத்ம பூஷன்” விருது மத்திய அரசால் வழங்கப்பட்டது.

2011 –  பிரிட்டிஷ் அரசு “சர்” பட்டம் வழங்கி கௌரவித்தது.

ஜி. என். ராமச்சந்திரன்-விஞ்ஞானி

 

ஜி. என். ராமச்சந்திரன்


G_N_Ramachandran

கோபாலசமுத்திரம் நாராயண ராமச்சந்திரன் என்ற ஜி.என். ராமச்சந்திரன் 20 ஆம் நூற்றாண்டில் இந்தியாவில் வாழ்ந்த சிறந்த விஞ்ஞானிகளுள் முக்கியமானவர் ஆவார். இவரது கண்டுபிடிப்பான தசைநார்ப் புரதத்தின் மூற்றை எழுச்சுருள் வடிவம், புரதக்கூறுகளின் வடிவமைப்பை அடிப்படையாக அறிந்து கொள்ள உதவியது, அதுமட்டுமல்லாமல், உயிரியலிலும், இயற்பியலிலும் பல முக்கிய ஆய்வுகளை நிகழ்த்தியவர்.

பிறப்பு: அக்டோபர்  8, 1922

பிறப்பிடம்: திருநெல்வேலி, தமிழ்நாடு, இந்தியா

இறப்பு: ஜூலை 4, 2001

பணி: விஞ்ஞானி

நாட்டுரிமை: இந்தியன்

பிறப்பு

கோபாலசமுத்திரம் நாராயண ராமச்சந்திரன் அவர்கள், தெற்கிந்திய மாநிலமான கேரளாவிலுள்ள எர்ணாகுளத்தில்  ஜி. ஆர். நாராயணன் மற்றும் லக்ஷ்மி அம்மாள் ஆகியோரின் மூத்த மகனாக அக்டோபர்  8, 1922 ஆம் ஆண்டு பிறந்தார். அவரது முன்னோர்கள் தமிழ்நாட்டிலுள்ள திருநெல்வேலி மாவட்டத்தில் வாழ்ந்ததாகக் கூறப்படுகிறது.

ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி

பெங்களூரிலுள்ள இந்திய அறிவியல் கழக நிறுவனத்தில் 1942 ஆம் ஆண்டு தனது மின் பொறியியல் படிப்பைத் தொடங்கினார். ஆனால் அவருக்கு பொறியியல் துறையை விட இயற்பியல் பயில மிகுந்த ஆர்வம் இருப்பதை உணர்ந்த அவர் பிறகு இயற்பியல் துறைக்கு மாறினார். 1942-ல் இயற்பியல் பாடத்தில் முதுகலை பட்டம் பெற்ற அவர், பின்னர் இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்ற சர்.சிவி. ராமன் வழிகாட்டுதலின் கீழ் ஐ.ஐ.எஸ்.சி-யில் ஒரு ஆய்வு மாணவராகவும் சேர்ந்தார்.

1947 ஆம் ஆண்டு ஜி.என். ராமச்சந்திரன் முனைவர் பட்டம் பெற்ற பிறகு இங்கிலாந்து சென்று அங்குள்ள கேம்பிரிட்ஜில் கேவண்டிஷ் ஆய்வகத்தில் இரண்டு ஆண்டுகள் (1947 முதல் 1949 வரை) தனது ஆய்வை மேற்கொண்டார், பின்னர் பெங்களூரிலுள்ள “இந்திய அறிவியல் நிறுவனத்தில்” எக்ஸ்ரே (X-Ray) நுண்ணோக்கிக்கான ஒரு ஆய்வை மேற்கொண்டார். இது எக்ஸ்ரே (X-Ray) துறையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

ஜி.என். ராமச்சந்திரனின் அறிவியல் ஆராய்ச்சிகள்

1949 ஆம் ஆண்டு பெங்களூரிலுள்ள “இந்திய அறிவியல் நிறுவனத்தில்” இயற்பியல் உதவி பேராசிரியராகவும் மற்றும் 1952-ல் சென்னை பல்கலைக்கழகத்தின் இயற்பியல் துறை தலைவராகவும் பணியாற்றினார். 1954-ல் ராமச்சந்திரனின் கோபிநாத் கர்தாவுடன் சேர்ந்து சவ்வு என்ற மூன்று வடிவ அமைப்பை பற்றி ஒரு ஆய்வு அறிக்கையை வெளியிட்டார். பிறகு மூலக்கூறு உயிரியற்பியலில் புரதங்களின் கட்டமைப்பு பற்றிய ஆய்வை மேற்கொண்டார்.

1963 ஆம் ஆண்டு “மூலக்கூறு உயிரியல்” என்ற தலைப்பில் ஒரு ஆய்வறிக்கையை வெளியிட்டார், இந்த ஆய்வு இவருக்கு பெரும் புகழை தேடித்தந்தது மட்டுமல்லாமல் அவருடைய ஆராய்ச்சி வாழ்க்கையில் இது ஒரு முக்கிய தருணமாகவும் அமைந்தது. X-கதிர் படிகவியல், பெப்டைட் தொகுப்பு, பிசியோ ரசாயன பரிசோதனை, என்.எம்.ஆர் மற்றும் கூடுதல் ஆப்டிகல் ஆய்வுகளையும் மேற்கொண்டார்.

1971-ல் ராமச்சந்திரனின் அவருடைய சக விஞ்ஞானி ஏ. வி. லக்ஷ்மிநாராயணனுடன் சேர்ந்து எக்ஸ்ரே வெட்டுவரைவு துறையில் சுழற்சி – கணிப்பு வழிமுறைகளுக்கான ஆய்வை மேற்கொண்டனர். வெற்றிகரமாக முடிந்த இவர்களின் ஆய்வு அதே ஆண்டில் ஒரு பதிப்பாகவும் வெளியிடப்பட்டது.

விருதுகள் மற்றும் அங்கீகாரங்கள்

ஜி.என். ராமச்சந்திரன் அனைவராலும் விரும்பப்படும் ஒரு மரியாதைக்குரிய விஞ்ஞானி ஆவார். அவருடைய அறிவியல் ஆய்விற்காக கிடைக்கப்பெற்ற விருதுகள் சில:

  • 1961 –ல் இந்திய இயற்பியல் துறையில் இவருடைய பங்களிப்பை பாராட்டி “சாந்தி ஸ்வரூப் பட்நாகர் விருது” வழங்கப்பட்டது.
  • லண்டன் ராயல் சொசைட்டி ஆஃப்  ஃபெல்லோஷிப்.
  • 1999 –ல் படிகவியல் துறையில் அவருடைய சிறந்த பங்களிப்பிற்காக படிகவியல் சர்வதேச ஒன்றியம் இவருக்கு இவால்ட் (Ewald) பரிசை வழங்கியது.

இறப்பு

1998-ல் ஜி.என். ராமச்சந்திரனின் மனைவி ராஜலக்ஷ்மியின் இறப்பிற்கு பின், தனிமையில் தவித்த அவர் ஜூலை 4, 2001 ஆம் ஆண்டு தன்னுடைய 79-தாவது வயதில் மாரடைப்பால் மரணமடைந்தார்.

காலவரிசை

1922 – ஜி.என். ராமச்சந்திரன் அக்டோபர் 8 ம் தேதி பிறந்தார்.

1942 – பெங்களூரில் உள்ள “இந்திய அறிவியல் கழகம்” நிறுவனத்தில் ஒரு மாணவராக சேர்ந்தார்.

1942 – ஐ.ஐ.எஸ்.சியிலிருந்து இயற்பியல் பாடத்திற்காக முதுகலை பட்டம் பெற்றார்.

1947 – டி.எஸ்.சி பட்டம் பெற்றார்.

1947 – முனைவர் (PhD) படிப்பிற்காக கேம்பிரிட்ஜ் சென்றார்.

1949 – ஐ.ஐ.எஸ்.சியில் (பெங்களூரு) இயற்பியல் துணைப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.

1952 – சென்னை பல்கலைக்கழகத்தில் இயற்பியல் துறை தலைவராகப் பணியாற்றினார்.

1954 – “சவ்வு” என்ற மூன்று வடிவமைப்பு வெளியிடப்பெற்றது.

1963 – ராமச்சந்திரன் ப்ளாட் வெளியிடப்பட்டது.

1970 – பெங்களூரில் ஐ.ஐ.எஸ். மூலக்கூறு உயிரி இயற்பியல் பிரிவு உருவாக்கப்பட்டது.

1971 – எக்ஸ்-ரேவிலுள்ள வெட்டுவரைவு சுழற்சி கணிப்பு நெறிமுறைகள் பற்றி ஆய்வறிக்கை வெளியிட்டார்.

1998 – ராமச்சந்திரனின் மனைவி ராஜலட்சுமி காலமானார்.

2001 – ஜூலை 4ஆம் தேதி ராமச்சந்திரன் தனது 79 வயதில் மறைந்தார்.

சுப்பிரமணியன் சந்திரசேகர்-விஞ்ஞானி


Subrahmanyan-Chandrasekharசுப்பிரமணியன் சந்திரசேகர் அவர்கள், ஒரு புகழ்பெற்ற வானியல் இயற்பியலாளர் ஆவார். லாகூரில் பிறந்து, தமிழ்நாட்டிலுள்ள சென்னையில் கல்விக் கற்று, பின்னர் ஐக்கிய அமெரிக்காவில் குடியுரிமை பெற்று, சிக்காகோ பல்கலைக்கழகத்தில் வானியல் ஆய்வாளராகப் பணியாற்றினார். தன்னுடைய வாழ்நாளில் பெரும் பகுதியை அமெரிக்காவில் வாழ்ந்த அவர், விண்மீன்கள் கட்டமைப்புத் துறையில் ஆராய்ச்சி மேற்கொண்டு, 1983 ஆம் ஆண்டு விண்மீன்கள் கட்டமைப்பு பற்றிய கண்டுபிடிப்பிற்காக இயற்பியலுக்கான “நோபல்பரிசு” பெற்றார். மேலும், ‘கோப்லி விருது’, அறிவியலுக்கான ‘தேசிய விருது’ எனப் பல தேசிய விருதுகளை வென்றதோடு மட்டுமல்லாமல், ஏராளமான அறிவியல் நூல்களையும் எழுதியுள்ளார். உலக அளவில் குறிப்பிடத்தக்க வானவியல் இயற்பியலாளர்களுள் ஒருவராக மதிக்கப்பட்ட சுப்பிரமணியன் சந்திரசேகரின் வாழ்க்கை வரலாறு மற்றும் அவர் மேற்கொண்ட சாதனைகளை விரிவாகக் காண்போம்.

பிறப்பு: அக்டோபர் 19, 1910

இடம்: லாகூர், பஞ்சாப் மாநிலம், பிரிட்டிஷ் இந்தியா (தற்போது பாகிஸ்தானில்)

பணி: வானியல் இயற்பியலாளர்

இறப்பு: ஆகஸ்ட் 21, 1995

நாட்டுரிமை: இந்தியன்

பிறப்பு

சுப்பிரமணியன் சந்திரசேகர் அவர்கள், 1910 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 19 ஆம் தேதி பிரிட்டிஷ் ஆட்சியின் பொழுது, இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்திலுள்ள “லாகூரில்” (தற்போது பாகிஸ்தானில் உள்ளது) சி. சுப்பிரமணியன் ஐயருக்கும், சீதா லட்சுமி அம்மையாருக்கும் மகனாகப் பிறந்தார். இவருடைய தந்தை ஒரு அரசு அதிகாரியாக வேலைப்பார்த்து வந்தார். இவருடன் ராஜலட்சுமி, பாலபார்வதி, சாரதா, வித்யா, சாவித்திரி, சுந்தரி என ஆறு சகோதரிகளும் விசுவநாதன், பாலகிருஷ்ணன், ராமநாதன் என மூன்று சகோதரர்களும் பிறந்தனர். இவர் சி. வி. ராமனுடைய உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி

லாகூரில் ஐந்து வருடம் மற்றும் லக்னோவில் இரண்டு வருடங்கள் எனத் தன்னுடைய குழந்தைப் பருவத்தை கழித்த சுப்பிரமணியன் சந்திரசேகர் அவர்களின் குடும்பம் சென்னைக்குக் குடிபெயர்ந்தது. சென்னையில் திருவல்லிக்கேணியிலுள்ள இந்து உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்து படித்த அவர், பின்னர் மாநிலக் கல்லூரியில் மேல்நிலைப் கல்வியைத் தொடர்ந்து, அதே கல்லூரியில் இயற்பியல் துறையில் பி.ஏ இளங்கலைப் பட்டமும் பெற்றார்.

ஆராய்ச்சியின் முதற்படி

1928 ஆம் ஆண்டு “ஆர்னோல்ட் சம்மர்ஃபெல்ட்” இந்தியா வந்திருந்த பொழுது,    சென்னை மாநிலக் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த சுப்பிரமணியன் சந்திரசேகர் அவர்கள், அவரை சந்தித்து, இயற்பியலில் நிகழ்ந்திருந்த புதிய ஆராய்ச்சிகளை பற்றி கேட்டுத் தெரிந்துகொண்டார். மேலும், அவைப் பற்றிய புத்தகங்களைப் படிப்பதில் கவனமும் செலுத்தினார். பிறகு அடுத்த ஆண்டே தன்னுடைய ஆராய்ச்சியின் முதல் கட்டுரையை பதிப்பித்த அவர், மேலும் இரண்டு கட்டுரைகளை அதற்கடுத்த ஆண்டு வெளியிட்டார். தன்னுடைய ஆராய்ச்சிக் கட்டுரைகள் மூலம் இந்திய அரசின் நன்மதிப்பைப் பெற்ற அவர், 1930 ஆம் ஆண்டு மத்திய அரசின் பரிசும், பணவுதவியும் பெற்று மேல்படிப்பிற்காக பிரிட்டன் சென்று, கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் கல்விப் பயின்றார்.

சுப்பிரமணியன் சந்திரசேகரின் ஆராய்ச்சிப் பணிகள்

பேராசிரியர் ஆர். எச். ஃபவுலரின் கீழ் ஆராய்ச்சி மாணவராகத் தன்னுடைய ஆராய்ச்சிப் பணிகளைத் தொடர்ந்த அவர், 1933 ஆம் ஆண்டு கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் மூலம் ‘முனைவர் பட்டம்’ பெற்றார். பிறகு “ட்ரினிட்டி கல்லூரியில்” ஆராய்ச்சிப் பேராசிரியராக சேர்ந்து, அங்கு உலகப் புகழ்பெற்ற வானியல் வல்லுனராக விளங்கிய பேராசிரியர் “ஆர்தர் எடிங்டனைச்” சந்தித்தார். தனக்குப் பிடித்த ஆய்வாளருடன் இணைந்து பழகும் வாய்ப்பு கிடைத்ததை நினைத்து உற்சாகமடைந்தார். பின்னர், இங்கிலாந்து சென்று மீண்டும் தன்னுடைய ஆய்வு பணிகளை தொடர்ந்த அவர், விண்மீன்களின் கட்டமைப்பு பற்றி பல ஆய்வு கட்டுரைகளை வெளியிட்டதோடு மட்டுமல்லாமல், தம்முடைய ஆராய்ச்சிகளைப் பற்றி பல்வேறு இடங்களில் சிறப்புரையாற்றினார். பிறகு, 1937 ஆம் ஆண்டில் அமெரிக்காவில் உள்ள சிகாகோ பல்கலைக்கழகத்தின் வானியல் ஆய்வாளர் பணி அவரைத் தேடி வந்தது. மிகுந்த மகிழ்ச்சியுடன் அமெரிக்கா சென்று பணியைத் தொடர்ந்த அவர், மாணவர்களுக்குக் கல்விக் கற்பித்ததுடன் தன்னுடைய ஆராய்ச்சியிலும் தொடர்ந்து ஈடுபட்டு வந்தார். சிகாகோ பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் போற்றும் சிறந்த பேராசிரியராக விளங்கியதோடல்லாமல், இதுவரை தாம் செய்த ஆய்வுகளைத் தொகுத்து “நட்சத்திரங்களின் அமைப்பு” என்ற நூலையும் வெளியிட்டார். மேலும், வானியல் ஆய்விற்காக பல கட்டுரைகளை வெளியிட்ட அவருக்கு பல்வேறு நாடுகளிலிருந்து விருதுகளும், பதக்கங்களும் அவரைத் தேடி வந்தது. அது மட்டுமல்லாமல், உலகின் பெருமைக்குரிய விருதாகக் கருதப்படும் “நோபல் பரிசு” 1983 ஆம் ஆண்டில், விண்மீன்கள் பற்றிய ஆய்விற்காக இவருக்கு இயற்பியலுக்கான “”நோபல்பரிசு” வழங்கப்பட்டு, இவரை புகழின் உச்சிக்கே கொண்டு சென்றது.

இல்லற வாழ்க்கை

அமெரிக்காவில் உள்ள சிகாகோ பல்கலைக்கழகத்தில் வானியல் ஆய்வாளராகப்  பணியாற்றிக் கொண்டிருந்த அவர், இந்தியா வந்திருந்த பொழுது தன்னுடன் பிரசிடென்சி கல்லூரியில் பயின்ற லலிதா என்பவரை திருமணம் செய்துக்கொண்டார். படிக்கும் பொழுதே, நன்கு அறிமுகமானவர்கள் என்பதால் மணவாழ்வில் அவருக்கு ஏற்ற துணையாய் இருந்து, அவருடைய ஆராய்ச்சிக்குத் தூண்டுகோலாய் இருந்தார்.

விருதுகளும், மரியாதைகளும்

  • 1944 – லண்டன் ராயல் சொசைட்டி உறுப்பினர்.
  • 1952ல் ‘ப்ரூஸ் பதக்கம்’.
  • அமெரிக்க அறிவியல் கழகத்தின் ‘ஃபோர்டு பதக்கம்’.
  • கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் மூலம் ‘ஆதம் பரிசு’.
  • 1953 ஆம் ஆண்டு இங்கிலாந்து நாட்டின் ராயல் வானியல் கழகத்தின் மூலம் ‘தங்கப்பதக்கம்’.
  • 1967 ஆம் ஆண்டு ஜனாதிபதி லிண்டன் ஜான்சன் மூலம் ‘தேசிய அறிவியல் விருது’.
  • 1971ல் ‘ஹென்றி டிராபர் பதக்கம்’.
  • இந்திய அரசு வழங்கிய “பத்ம விபூஷன்”
  • 1983 ஆம் ஆண்டு இயற்பியலுக்கான ‘நோபல் பரிசு’.
  • 1984ல் ராயல் சொசைட்டியின் மிக உயர்ந்த மரியாதையான காப்லே பதக்கம்.

 இறப்பு:

ஒரு ஆராய்ச்சியாளராக மட்டுமல்லாமல், சிறந்த ஆசிரியராகவும் வாழ்ந்த சுப்பிரமணியன் சந்திரசேகர் அவர்கள், 1995 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 21ம் நாள் இருதய பாதிப்பு ஏற்பட்டு அமெரிக்காவிலுள்ள சிக்காகோவில் தன்னுடைய 84 வது வயதில் காலமானார்.

சி. வி. ராமன்-விஞ்ஞானி


CV-Raman

இந்தியா உருவாக்கிய மிகப் புகழ்பெற்ற விஞ்ஞானிகளுள் ஒருவர், சி.வி. ராமன் ஆவார். அவரது முழு பெயர் சந்திரசேகர வேங்கட ராமன். அவரது படைப்புகளில் முன்னோடியான ஒளிச்சிதறளுக்கு, சி.வி. ராமன் அவர்கள் 1930 இல் இயற்பியலுக்கான நோபல் பரிசை வென்றார். முழுமையாக இந்தியாவிலேயே படித்து நோபல் பரிசு பெற்ற முதல் இந்திய அறிஞர் என்ற பெருமைப் பெற்ற சர். சி. வி. ராமன் அவர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் அவரது கண்டுப்பிடிப்புகள் பற்றியறிய தொடர்ந்து படிக்கவும்.

பிறப்பு: நவம்பர் 7, 1888

பிறப்பிடம்: திருச்சி, தமிழ்நாடு, இந்தியா

இறப்பு: நவம்பர் 21, 1970

பணி: விஞ்ஞானி, பேராசிரியர்

நாட்டுரிமை: இந்தியா

பிறப்பு:

சந்திரசேகர வேங்கட ராமன், தமிழ்நாட்டிலுள்ள திருச்சிராப்பள்ளியில் நவம்பர் 7, 1888 ஆம் ஆண்டு பிறந்தார். சந்திரசேகர் ஐயர் மற்றும் பார்வதி அம்மா அவர்களுக்கு இரண்டாவது குழந்தையாக பிறந்தார்.

ஆரம்ப வாழ்க்கையும், கல்வியும்

சந்திரசேகர வேங்கட ராமன் அவர்களின் தந்தை கணிதம் மற்றும் இயற்பியலில் ஒரு பேராசிரியராக இருந்தால், அவர் வீட்டில் ஒரு கல்வி சூழலைக் கொண்டிருந்தார். அவர் 1902 ஆம் ஆண்டு, சென்னையிலுள்ள பிரெசிடென்சி கல்லூரியில் சேர்ந்தார். 1904ஆம் ஆண்டு, பி.ஏ பட்டப்படிப்பில் தேர்ச்சிப் பெற்று முதல் மாணவனாக திகழ்ந்த இவர், இயற்பியலுக்கான தங்கப்பதக்கதையும் பெற்றார். நிறைய மதிப்பெண்கள் வித்தியாசத்தில் 1907 ஆம் ஆண்டு எம்.ஏ பட்டம் பெற்றார்.

சி.வி. ராமனின் ஆராய்ச்சிகள்

இந்தியாவில் அந்த காலக்கட்டத்தில் விஞ்ஞானிகளுக்கு வாய்ப்புகள் குறைவாகவே இருந்தது. அதனால், 1907 ஆம் ஆண்டு, ராமன் அவர்கள் இந்திய நிதித் துறையில் சேர்ந்தார். அவரது அலுவலக நேரம் முடிந்த பிறகு, அவர் கல்கத்தாவில் அறிவியல் அபிவிருத்திக்கான இந்திய சங்கத்தின் ஆய்வகத்தில் அவரது பரிசோதனை ஆய்வை மேற்கொண்டார். அதே ஆய்வகத்தில் அவர் ஒலியியல் மற்றும் ஒளியியல் ஆராய்ச்சிகளையும் மேற்கொண்டார்.

விருதுகளும், அங்கீகாரங்களும்

1917 ல், கல்கத்தா பல்கலைக்கழகம் சி.வி.ராமன் அவர்களுக்கு இயற்பியலில் ‘சார் தரக்நாத் பாலித் பேராசிரியர்’ என்ற பதவியை வழங்கியது. அடுத்த பதினைந்து ஆண்டுகளாக அங்கு தங்கியிருந்தார். அங்கு அவர் இருந்த காலத்தில், அவரது ஒளியியல் மற்றும் ஒளி சிதறலுக்கான ஆராய்ச்சிப் பணி உலக அளவிலான அங்கீகாரத்தை பெற்றது. லண்டன் ராயல் சொசைட்டியால் அவர் 1924ல் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1929 ஆம் ஆண்டில், பிரிட்டிஷ் பேரரசால்  இவருக்கு “நைட் ஹீட்” என்ற பட்டமும், இங்கிலாந்து அரசியாரால் ‘சர்’ பட்டமும் அளிக்கப் பட்டது. 1930ல், தனது இயற்பியலுக்கான ஒளி சிதறல் ஆராய்ச்சிக்காக சர் சி.வி. ராமன் அவர்களுக்கு  ‘நோபல் பரிசு’ வழங்கப்பட்டது. பின்னர் இந்த கண்டுபிடிப்புக்கு “ராமன் விளைவு” என்று பெயரிடப்பட்டது.

பிறப் பணிகள்

1930ல் பெங்களூரில் புதிதாக நிறுவப்பட்ட இந்திய அறிவியல் கழகத்தில், சி.வி. ராமன் அவர்கள் இயக்குனராக சேர்ந்தார். பின்னர், இயற்பியல் பேராசிரியராக அங்கு இரண்டு வருடங்கள் பணியில் தொடர்ந்தார். சார் சி.வி.ராமன் நடத்திய சில ஆராய்சிகள்: சோதனை மற்றும் கோட்பாட்டு ஆய்வுகளான

1947 ஆம் ஆண்டில், அவர் சுதந்திர இந்தியாவின் புதிய அரசாங்கத்தில் முதல் தேசிய பேராசிரியராக நியமிக்கப்பட்டார். 1948 ஆம் ஆண்டு, இந்தியன் இன்ஸ்டிடியூட்டில் இருந்து  ஓய்வு பெற்றார். பின்னர், ஒரு வருடம் கழித்து,  பெங்களூரில் ‘ராமன் ஆராய்ச்சி நிலையம்’ நிறுவி, அங்கு அவர் தனது மரணம் வரை பணிபுரிந்தார்.

இறப்பு

சர் சி.வி. ராமன் அவர்கள், நவம்பர் 21, 1970 அன்று இறந்தார்.

ஏ. பி. ஜே. அப்துல் கலாம்-விஞ்ஞானி

 

Abdul Kalam

இந்தியாவின் தலைசிறந்த விஞ்ஞானி, தொழில்நுட்ப வல்லுநர், மிகப்பெரிய பொருளாளர், இந்தியாவின் 11 வது குடியரசு தலைவர், இந்திய ஏவுகணை நாயகன், இந்திய விஞ்ஞான வளர்ச்சியின் தந்தை, சிறந்த ஆசிரியர் மற்றும் அனைவராலும் மதிக்கதக்க அற்புதமான பேச்சாளர், வருங்கால இளைஞர்களின் முன்மாதிரியாக கருதப்படும் நம் எல்லோருக்கும் தெரிந்த ஏ.பி.ஜே அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாற்றை பற்றி மேலும் தெரிந்துகொள்ள மேலும் படியுங்கள்.

பிறப்பு: அக்டோபர் 15, 1931

மரணம்: ஜூலை 27, 2015

இடம்: இராமேஸ்வரம் (தமிழ் நாடு)  

பிறப்பு:

1931 ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் 15 ஆம் நாள் ஜைனுலாப்தீனுக்கும், ஆஷியம்மாவுக்கும் மகனாக இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில், பாம்பன் தீவில் அமைந்துள்ள இராமநாதபுரம் மாவட்டத்தில் இருக்கும் ஒரு சிறிய நகராட்சியான இராமேஸ்வரத்தில் பிறந்தார். இவர் ஒரூ இஸ்லாமிய குடும்பத்தை சேர்ந்தவர்.

இளமைப் பருவம்:

அப்துல் கலாம், இராமேஸ்வரத்திலுள்ள தொடக்கப்பள்ளியில் தனது  பள்ளிப்படிப்பை தொடங்கினார். ஆனால் இவருடைய குடும்பம் ஏழ்மையில் இருந்ததால், இளம் வயதிலே இவர் தன்னுடைய குடும்பத்திற்காக வேலைக்குச் சென்றார். பள்ளி நேரம் போக மற்ற நேரங்களில் இவர் செய்தித்தாள்கள் விநியோகம் செய்தார். இவருடைய பள்ளிப்பருவத்தில் இவர் ஒரு சராசரி மாணவனாகவே வளர்ந்தார்.

கல்லூரி வாழ்க்கை:

தன்னுடைய பள்ளிப்படிப்பை முடித்தபிறகு, திருச்சிராப்பள்ளியிலுள்ள “செயின்ட் ஜோசப் கல்லூரியில்” இயற்பியல் பயின்றார். 1954ஆம் ஆண்டு, இயற்பியலில் இளங்கலை பட்டம் பெற்றார். ஆனால், இயற்பியல் துறையில் ஆர்வம் இல்லை என உணர்ந்த இவர், 1955 ஆம் ஆண்டு தன்னுடைய “விண்வெளி பொறியில் படிப்பை” சென்னையிலுள்ள எம்.ஐ.டி-யில் தொடங்கினார். பின்னர் அதே கல்லூரியில் முதுகலைப் பட்டமும் பெற்றார்.

விஞ்ஞானியாக ஏ.பி.ஜே அப்துல் கலாம்:      

1960 ஆம் ஆண்டு வானூர்தி அபிவிருத்தி அமைத்தல் பிரிவில் (DRDO) விஞ்ஞானியாக தன்னுடைய ஆராய்ச்சி வாழ்க்கையைத் தொடங்கிய அப்துல் கலாம், ஒரு சிறிய ஹெலிகாப்டரை இந்திய ராணுவத்திற்காக வடிவமைத்து கொடுத்தார். பின்னர், இந்திய விண்வெளி ஆராய்ச்சி கூடத்தில் (ISRO) தனது ஆராய்ச்சிப்பணிகளைத் தொடர்ந்த அவர், துணைக்கோள் ஏவுகணைக் குழுவில் (SLV) செயற்கைக்கோள் ஏவுதலில் முக்கிய பங்காற்றினார். 1980 ஆம் ஆண்டு SLV -III ராக்கெட்டைப் பயன்படுத்தி ரோகினி-I என்ற துணைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் ஏவச்செய்தார். இது அவருக்கு மட்டுமல்லாமல், இந்தியாவிற்கே ஒரு சாதனையாக அமைந்தது.  இத்தகைய வியக்கதக்க செயலைப் பாராட்டி மத்திய அரசு இவருக்கு 1981 ஆம் ஆண்டு இந்தியாவின் மிகப் பெரிய விருதான “பத்ம பூஷன்” விருது வழங்கி கௌரவித்தது.  1963 ஆம் ஆண்டு முதல் 1983 ஆம் ஆண்டு வரை, இந்திய விண்வெளி ஆராய்ச்சி கூடத்தில் பல பணிகளை சிறப்பாக செய்த இவர், 1999 ஆம் ஆண்டு “பொக்ரான் அணு ஆயுத சோதனையில்” முக்கிய பங்காற்றியுள்ளார். இந்தியாவை அணு ஆயுத வல்லரசாக மாற்றிய ஏ.பி.ஜே அப்துல் கலாம், இதுவரை ஐந்து ஏவுகணை திட்டங்களில் பணிபுரிந்துள்ளார். அவர், அனைவராலும் இந்திய ராணுவ ராக்கெட் படைப்பின் பிதாவாக போற்றப்படுகிறார்.

குடியரசுத் தலைவராக ஏ.பி.ஜே அப்துல் கலாம்:     

2002 ஆம் ஆண்டு நடந்த குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்று, இந்தியாவின் 11 வது குடியரசு தலைவராக ஜூலை 25 ஆம் நாள் 2002 ல் பதவியேற்றார். குடியரசு தலைவராவதற்கு முன், இந்தியாவின் மிகப்பெரிய விருதான “பாரத ரத்னா விருது” மத்திய அரசு இவருக்கு வழங்கி கௌரவித்தது. மேலும், “பாரத ரத்னா” விருது பெற்ற மூன்றாவது குடியரசு தலைவர் என்ற பெருமையைப் பெற்றார். 2007 ஆம் ஆண்டு வரை குடியரசுத் தலைவராக இருந்த இவர் “மக்களின் ஜனாதிபதி” என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்டார். 2007 ஆம் ஆண்டு குடியரசுத் தேர்தலில் மீண்டும் போட்டியிட நினைத்த கலாம், பிறகு பல காரணங்களால் அந்த தேர்தலில் போட்டியிட போவதில்லை என முடிவு செய்து விலகினார்.

மரணம்:

அப்துல் கலாம் அவர்கள் ஜூலை 27, 2015 ஷில்லாங்கில் உள்ள இண்டியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மென்ட்டில் மேடையில் பேசிக்கொண்டிருந்தபோதே மயங்கி விழுந்து மறித்தார்.

விருதுகள்:

1981 – பத்ம பூஷன்

1990 – பத்ம விபூஷன்

1997 – பாரத ரத்னா

1997 – தேசிய ஒருங்கிணைப்பு இந்திராகாந்தி விருது

1998 – வீர் சவர்கார் விருது

2000 – ராமானுஜன் விருது

2007 – அறிவியல் கவுரவ டாக்டர் பட்டம்

2007 – கிங் சார்லஸ்-II பட்டம்

2008 – பொறியியல் டாக்டர் பட்டம்

2009 – சர்வதேச வோன் கார்மான் விங்ஸ் விருது

2009 – ஹூவர் மெடல்

2010 – பொறியியல் டாக்டர் பட்டம்

2012 –  சட்டங்களின் டாக்டர்

2012 – சவரா சம்ஸ்க்ருதி புரஸ்கார் விருது

ஏ.பி.ஜே அப்துல் கலாம் எழுதிய நூல்கள்:

  • அக்னி சிறகுகள்
  • இந்தியா 2020
  • எழுச்சி தீபங்கள்
  • அப்புறம் பிறந்தது ஒரு புதிய குழந்தை

இறுதிவரைக்கும் பிரம்மச்சாரியாக வாழ்ந்த ஏ.பி.ஜே அப்துல் கலாமின் எளிமையான வாழ்க்கையும், அவரது இனிமையான பேச்சும் எல்லோரையும் கவர்ந்தது என்றால் வியப்பில்லை. ‘எதிர்கால இந்திய இளைஞர்கள் கையில்’ என்ற அவர் “கனவு காணுங்கள்! அந்த கனவை நினைவாக்க பாடுபடுங்கள்” என்னும் வாக்கியத்தை இளைஞர்களின் மனதில் வேரூன்ற செய்தவர்.

உலகம் போற்றும் விஞ்ஞானியான கலாம் தன்னுடைய பொன்மொழிகளாலும், கவிதைகளாலும், வாசகங்களாலும் அனைவரின் மனதிலும் நீங்கா இடம் பிடித்துள்ளார்.

அப்துல் கலாம் அவர்கள் தன்னுடைய இளமைக் காலம், உயர் படிப்பு, விமானம் தான் கனவு என்று இருந்து விதி வசத்தால் மாறி விஞ்ஞானி ஆனது மற்றும் அதில் தனக்குக் கிடைத்த அனுபவங்கள் அனைத்தையும் வாழ்க்கை வரலாறாக தனது சக ஊழியர் அருண் திவாரி உதவியுடன் “அக்னிச் சிறகுகள்” என்ற புத்தகமாக எழுதி இருக்கிறார்.

இளமைக் காலம்

ராமேஸ்வரத்தில் ஜெயனுல்லாபுதீன், ஆஷியம்மா தம்பதியினருக்கு மகனாக பிறந்தவர் கலாம். நடுத்தர வசதிக் குடும்பத்தில் இருந்த கலாமுக்கு படிக்க பணம் சிரமமாகவே இருந்து இருக்கிறது. மேற்படிப்பு படிக்க இவரின் சகோதரி தன் நகையை வைத்துக் கொடுத்த பணத்தில் தான் படிப்பையே தொடர்ந்து இருக்கிறார்.

இந்து முஸ்லிம்

கலாமும் சரி அவரது அப்பாவும் சரி மற்ற சமுதாயத்தினருடன் ரொம்ப இணக்கமாக இருந்து இருக்கிறார்கள். அதோடு இவர்கள் இருந்த பகுதியில் இந்து முஸ்லிம் சமுதாயத்தினர் மிகவும் நெருக்கமாகப் பழகி இருக்கிறார்கள். ராமேஸ்வரத்தில் இந்து முஸ்லிம் சமுதாயத்தினர் ஒற்றுமையாக இருந்ததைப் போல இவர் மேற்படிப்பு படிக்கப் போன இடத்தில் இல்லை என்பதைக் குறிப்பிடுகிறார்.

கலாமின் தந்தையும் ராமேஸ்வரம் கோவிலின் தலைமை குருக்கள் பஷி லட்சுமண சாஸ்திரியும் நெருங்கிய நண்பர்கள். கலாமும் சாஸ்த்ரி மகனும் ஒரே வகுப்பில் படிப்பவர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள். கலாம் முஸ்லிம் அடையாளத்துடனும் சாஸ்திரி மகன் இந்து அடையாளத்துடனும் அருகருகே அமர்ந்து இருப்பதைப் பார்த்த ஆசிரியர், கலாமை பின் இருக்கையில் சென்று அமரக் கூறுகிறார். இந்த சமயத்தில் சாஸ்திரி மகன் கண்ணீர் விட்டு அழுத காட்சி தன் கண்ணை விட்டு மறையவில்லை என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

இதன் பிறகு லட்சுமண சாஸ்திரி பள்ளிக்கு வந்து “குழந்தைகள் மனதில் இது போன்ற சமூக மத வேற்றுமைகளை புகுத்தாதீர்கள்” என்று ஆசிரியரை கண்டித்த பிறகு அவர் மன்னிப்புக் கேட்டுக்கொண்டதாக கூறி இருக்கிறார். ஒருமுறை லட்சுமண சாஸ்திரி தன் வீட்டிற்கு சாப்பிட அழைக்க அதற்கு அவரது ஆச்சாரமான மனைவி எதிர்ப்பு தெரிவிக்கிறார் ஆனால், தன் மனைவியின் எதிர்ப்பையும் மீறி கலாமிற்கு தானே பரிமாறுகிறார். திரும்ப ஒருமுறை சாப்பிட அழைக்கும் சாஸ்திரி, முன் அனுபவங்களால் கலாம் தயங்கியதைக் கண்டு அவருக்கு ஆறுதல் கூறி அழைத்துச் செல்கிறார். இந்தமுறை அவரது மனைவியே முன்வந்து அனைத்தையும் செய்கிறார்.

சகோதரி கொடுத்த நகை

கலாம் வளர்ச்சியில் அவருடைய ஒன்றுவிட்ட சகோதரர் சம்சுதீன் மற்றும் அவரது சகோதரியின் கணவர் ஜலாலுதீனும் முக்கியப் பங்கு ஆற்றி இருக்கிறார்கள். இவர்களை தனது வாழ்க்கையின் ஒவ்வொரு முக்கியத் தருணத்திலும் நினைவு கூறுகிறார். பள்ளியில், கல்லூரியில் இவருக்கு அமைந்த ஆசிரியர்கள் சிறப்பானவர்களாகவும் வழிகாட்டியாகவும் இருந்து இருக்கிறார்கள். இதனால் தானோ என்னவோ கலாமுக்கு ஆசிரியர் என்றால் ரொம்பப் பிடிக்கிறது. இதை பல்வேறு தருணங்களில் வெளிப்படுத்தி இருக்கிறார். விமானம் ஓட்டுவதில் அதிக ஆர்வம் கொண்ட கலாம் படிக்க வேண்டியது குறித்து தெளிவான அறிவு இல்லாததால், படிப்பதில் தலையை சுற்றி மூக்கை தொட வேண்டிய நிலை ஏற்பட்டது என்று குறிப்பிடுகிறார். இவர் படிப்பிற்கு இவரது சகோதரி தன் நகையை வைத்து கொடுத்த பணத்தில் படித்து பின் அரசு உதவித் தொகை மூலம் தொடர்ந்து இருக்கிறார். தான் வேலைக்கு சேர்ந்த பிறகு நகையை மீட்டுக்கொடுத்து விட வேண்டும் என்று கூறினார் ஆனால், மீட்டாரா என்பது பற்றி குறிப்பிடவில்லை.

விமானப் படை / பாதுகாப்பு அமைச்சகத்தின் தொழில்நுட்ப பிரிவு

படிப்பு முடிந்ததும் இரு இடத்தில் கலாமிற்கு நேர்முகத் தேர்வு வாய்ப்புக் கிடைக்கிறது. ஒன்று விமானப் படை இன்னொன்று பாதுகாப்பு அமைச்சகத்தின் தொழில்நுட்ப பிரிவு. இதற்காக டெல்லி பயணம் செய்கிறார். பாதுகாப்பு அமைச்சகத்தின் நேர்முகத்தேர்வில் அவரின் திறமைக்கு சவால் விடும் வகையில் கேள்விகள் இல்லை ஆனாலும், நேர்முகத்தேர்வை சிறப்பாகச் செய்கிறார். இதை முடித்து டேராடூன் விமானப்படை நேர்முகத் தேர்வு செல்லும் கலாம் களைப்பு, பதட்டத்தால் தேர்வாக முடியவில்லை. ஏமாற்றத்தால் உடைந்து போன கலாம் இனி என்ன செய்யப்போகிறோம் என்ற குழப்பத்தில் ஆழ்ந்து விடுகிறார்.

எம்மதமும் சம்மதம்

பின் கங்கையில் குளித்து மன நிம்மதி தேடி ரிஷிகேஷ் செல்லும் கலாம், அங்கே சந்திக்கும் ஒரு ரிஷியின் கருத்துக்கள் மற்றும் ஆலோசனையால் மனத் தெளிவு பெறுகிறார். தான் அங்கே உள்ளே நுழைந்ததுமே உடலில் ஒரு அதிர்வு ஏற்பட்டதாகக் கூறுகிறார். இதன் பிறகு தனக்கு கிடைத்த வழியான பாதுகாப்பு அமைச்சகத்தில் சேர்கிறார். கலாம் முஸ்லிமாக இருந்தாலும் பெரும்பாலான இடங்களில் இந்து மதக் குறிப்புகளையும் மேற்கோள் காட்டியிருக்கிறார். தன்னை எந்த மதத்தின் நபராகவும் முன்னிறுத்தாமல் புத்தகம் முழுக்க சம்பவங்களை கூறி வருவது உண்மையில் மிகப் பெரிய விஷயம்.

சம்பளம் 250 ரூபாய்

கலாமுக்கு விமானம் ஓட்ட முடியாமல் போய் விட்டதே என்ற ஏமாற்றம் இருந்தும், இங்கு விமானத்தை உருவாக்கும் பணி கிடைப்பதால் ஆறுதலடைகிறார். இவருடைய சம்பளம் 250 ரூபாய். கலாம் பின்னாளில் குடியரசுத் தலைவர் ஆனதும் போர் ஜெட் விமானத்தில் பயணித்தார். இவ்வாறு பயணித்த முதல் இந்தியக் குடியரசுத் தலைவரும் இவரே!

விமானத் தயாரிப்பில் ஈடுபட்டு அதில் சில காலம் சென்ற பிறகு “இந்திய விண்வெளி ஆய்வுக் குழு”விடம் இருந்து ராக்கெட் எஞ்சினியர் பொறுப்பிற்கு அழைப்பு வருகிறது. இங்கு லட்சுமண சாஸ்திரி கீதையில் மேற்கோள் காட்டியதை நினைவுபடுத்திக் கொள்கிறார். “வெற்றி பெற வேண்டும் என்ற பதட்டம் இல்லாமல் இருப்பது தான் வெற்றி பெறுவதற்கான சிறந்த வழி” என்பதை நினைவுபடுத்திக் கொண்டதாக கூறுகிறார்.

டாக்டர் விக்ரம் சாராபாய்

டாக்டர் விக்ரம் சாராபாய் (இவரை உதாரணமாக பல இடங்களில் குறிப்பிட்டு இருக்கிறார்), பேராசிரியர் எம் ஜி கே மேனன், அணு சக்தி கமிசன் துணைத் செயலாளர் சரஃப் ஆகிய மூவரும் தான் நேர்காணல் செய்து இருக்கிறார்கள்.

உருட்டி மிரட்டி கேள்விகளால் துளைத்தெடுக்கும் முரட்டுத் தனம் இல்லாமல், தன்னிடம் உள்ள சாத்தியக் கூறுகளை தெரிந்து கொள்ளும்படி கேள்விகள் அமைந்து இருந்ததாகக் கூறுகிறார். இந்த பணி வாய்ப்பு அவ்வளவு எளிதில் கிடைக்காத வராது வந்த மாமணி என்று கூறுகிறார்.

முதல் சுதேசி செயற்கைக்கோள் எஸ் எல் வி

“எஸ் எல் வி” செயற்கைக்கோள் தயாரிப்பில் அனைவரும் கடுமையாக பணிபுரிகிறார்கள். செயற்கைக்கோள் தயாராகி (10 ஆகஸ்ட் 1979) மேலெழுந்து நான்காவது கட்டத்தில் செல்லும் போது தொழில்நுட்பக் கோளாறால் கடலில் விழுந்து விடுகிறது.

இதனால், விரக்தியின் எல்லைக்கே சென்ற கலாம் தன் கால்கள் மரத்து விட்டன, உடல் பலம் முழுமையும் இழந்து விட்டதாகக் கூறுகிறார். உண்மையில் படிக்கும் நமக்கும் இவரின் மன நிலையை புரிந்து கொள்ள முடிகிறது. தன் உணர்ச்சிகளை சரியாக வெளிப்படுத்தி இருக்கிறார்.

பின் மறுபடியும் போராட்டம், மன உளைச்சல்கள், மற்றவர்களின் பரிகாசம், நெருக்கடி தொடர்கிறது. பல முயற்சிகளுக்குப் பிறகு 1980 ஜூலை 18 இந்தியாவின் முதல் சுதேசி செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் பாய்கிறது.

இருபது வருடப் போராட்டம் முடிவிற்கு வந்தது. இதில் கலாம் அடையும் சந்தோசம், நாமே அடைவது போல இருக்கிறது.

உற்சாக வெள்ளம் கரைபுரண்டோட கலாம் சகாக்கள் கலாமை தங்கள் தோளில் தூக்கிவைத்து ஊர்வலமாக வருகிறார்கள். தேசமே எதிர்பார்க்கும் ஒரு முயற்சியில் / பொறுப்பில் உள்ளவர் வெற்றி பெற்றால், அவரின் மன நிலையை யாரும் விளக்க வேண்டுமா?!

சக ஊழியர்களின் வெறுப்பு

இதன் பிறகு 1981 ல் ஒரு செயற்கைக்கோள் ஏவுகிறார்கள். இதில் கலாமின் பங்கு பாதி இருந்தாலும் ஊடகங்கள் இவரையே முன்னிறுத்தியதால் இதில் சம்பந்தப்பட்ட மற்ற சக ஊழியர்களின் வெறுப்பிற்கு ஆளாகிறார். இது மிகவும் தர்மசங்கடமான சூழ்நிலையை அவருக்குத் தருகிறது. அவருக்குக் கொடுக்கப்பட்ட “பத்மபூஷன்” விருதிலும் பலருக்கு அதிருப்தி. கலாமிற்கு அவசியமில்லாமல் முக்கியத்துவம் கொடுப்பதாக கூறுகிறார்கள். இதனால் கலாம் மன உளைச்சல் அடைகிறார்.

DRDO

இந்த நிலையில் DRDO [Defence Research and Development Organisation] என்ற அமைப்பில் சேரக் கூறி கலாமுக்கு அழைப்பு வருகிறது. இஸ்ரோவில் [ISRO – Indian Space Research Organisation] நடந்த “அரசியல்” சம்பவங்களால் என்ன செய்வது என்ற குழப்பத்தில் இருந்து பின் இவர்கள் அழைப்பை ஏற்று DRDO செல்வதாக முடிவு செய்கிறார். இஸ்ரோவில் கலாமை விடுவிக்க தாமதம் ஆனாலும், பின்னர் இங்கு இணைந்து விடுகிறார்.

DRDO வில் இணைந்த பிறகு இங்கு உள்ளவர்களை புரிந்து கொண்டு அவர்களின் பிரச்சனைகளை அறிந்து கொள்கிறார். இதற்கு சில காலம் எடுக்கிறது. அடுத்த பணியாக “பிருத்வி” ஏவுகணை தயாரிப்பது ஆரம்பமாகிறது.

இளைஞர்களின் முக்கியத்துவம்

இதற்கு இளைஞர்கள் தேவை என்பதை உணர்ந்து அவர்களை இதில் பங்கு பெற வைத்து அனுபவம் பெற்றவர்களின் தலைமையில் துடிப்பான இளமையும் இணைந்து உற்சாகமாகப் பணியாற்றுகிறார்கள். இங்கும் மூத்த அதிகாரிகளிடம் எதிர்ப்பை சம்பாதிக்க வேண்டி வருகிறது.

பிருத்வியின் வெற்றி

பிருத்வியின் வெற்றியில் உலக நாடுகள் அதிர்ந்து விடுகின்றன. சுதேசி ஏவுகணையான பிருத்வியின் வெற்றி பல நாடுகளுக்கு கலக்கத்தை ஏற்படுத்துகின்றன. இது குறித்த தகவல்கள் நமக்கு இந்தியனாக மிகவும் பெருமை அளிக்கிறது. இடையில் பிரதமர் இந்திராகாந்தி ஆய்வுக் கூடத்திற்கு வந்தது, அவர் கொலையான சம்பவத்தில் ஊரடங்கு நிலை பற்றி எல்லாம் குறிப்பிட்டு இருக்கிறார்.

ராஜீவ் காந்தியின் ஊக்கம்

இவருக்குப் பின் வந்த ராஜீவ் காந்தியும் தங்களுக்கு பெருமளவில் ஊக்கம் கொடுத்ததாகவும் பல விசயங்களில் தமக்கு உறுதுணையாக இருந்தது பற்றியும் கூறுகிறார். எஸ் எல் வி 3 வெற்றியால் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியை பார்க்கச் செல்ல வேண்டும் என்று இவரது உயர் அதிகாரி (தவான்) கூறியதும் தான் கவனிக்கிறார், தான் சுமாரான உடையும் செருப்பும் அணிந்து இருப்பதை.

பிரதமரை பார்க்கச் செல்லும் போது இப்படியே எப்படி செல்வது என்ற தன் சங்கடத்தை வெளிப்படுத்துகிறார். இதற்கு அவரது உயரதிகாரி நீங்கள் “வெற்றி” என்னும் அழகிய உடையை அணிந்து இருக்கிறார்கள் அதனால் கவலை வேண்டாம் என்று கூறுகிறார்.

இதன் பிறகு சந்திப்பு பற்றி விவரிக்கிறார்.

அக்னி தயாரிப்பும் பிரம்மாண்டமும்

இதன் பிறகு பெரிய பணியான “அக்னி” ஏவுகணை தயாரிப்பில் இவரது குழு ஈடுபடுகிறது. 500 விஞ்ஞானிகள் இதில் ஈடுபட்டு இருக்கிறார்கள். படிக்கும் போதே நமக்கு எப்படி இதெல்லாம் செய்து இருப்பார்கள்! அனைத்தையும் ஒருங்கிணைத்து இருப்பார்கள்!! என்ற ஆச்சர்யம் வராமல் போகாது.

பாதுகாப்பு அமைச்சர் கே ஆர் நாராயணன் கலாமுக்கு மிகவும் ஆதரவாகவும் அவரது செயல்களுக்கு உற்சாகம் கொடுப்பவராகவும் இருந்து இருக்கிறார். குறிப்பாக நாராயணன் மிகவும் தொலைநோக்குப் பார்வை கொண்டவர் என்பது கலாம் கூறுவதில் இருந்து நாம் புரிந்து கொள்ள முடிகிறது.

பணியைக் காதலித்த கலாம்

கலாம் தனது பணியை மிகவும் காதலித்து இருக்கிறார். குடும்பம் என்று வந்தால் தனிப்பட்ட பணிகளின் காரணமாக தன்னால் பணியில் முழுமையாக / நேர்மையாக நடந்து கொள்ள முடியாது போகும் என்று கருதி இருக்கிறார். இதன் காரணமாகவே திருமணம் செய்து கொள்ளவில்லை போல இருக்கிறது. தன்னுடைய சிந்தனை முழுவதையும் பணியில் வெற்றி பெறுவது, இந்தியாவின் வளர்ச்சியை உயர்த்துவது என்ற விசயங்களிலே வைத்து இருந்து இருக்கிறார். வேறு எந்த சிந்தனையும் இல்லை. பணியில் தவறு ஏற்படும் போதெல்லாம் அதற்காக மிகவும் வருந்தி இருக்கிறார். தன் தவறுகளுக்கு பொறுப்பேற்கவும் தயங்கவில்லை.

நீங்கள் உங்கள் பணியை காதலித்து உங்கள் முழு உழைப்பையும் செலவிட்டு இருந்தால் மட்டுமே தோல்வி அடையும் போது அதில் ஏற்படும் வலியை உண்மையாக உணர முடியும். இது கலாமுக்கு 100% பொருந்தும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. உண்மையாக உழைப்பவர்களின் நேர்மையை யாராவது சந்தேகப்பட்டால் அவர்களால் தாங்கிக் கொள்ளவே முடியாது. கலாம் ஒவ்வொரு முறை வெற்றி பெறும் போதும் தன் குடும்பத்தினர் மற்றும் நலம் விரும்பிகள் உடனில்லையே என்ற வருத்தத்தை பதிவு செய்து இருக்கிறார். இது புத்தகம் முழுக்க சீராக வருகிறது. வெற்றி பெற்றாலும் பகிர்ந்து கொள்ள அவருடன் எவருமில்லாத சோகம் நமக்கும் வருத்தத்தை அளிக்கிறது. இடையில் சகோதரி கணவர், தாய், தந்தை, உயர் அதிகாரி இழப்புகள் கலாமை மிகுந்த துயரத்தில் ஆழ்த்துகின்றன.

ஊடகங்களின் கேலி

“அக்னி” ஏவுகணை 1989 ஏப்ரல் 20 ல் சோதனை செய்து பார்க்க நாள் குறிக்கப்படுகிறது. இதற்காக சோதனைப் பகுதியில் உள்ள மக்களை வெளியேற்றுகிறார்கள். இதற்கு ஊடகங்கள் சர்ச்சையை கிளப்புகின்றன. இருந்தும் திட்டத்தில் எந்த மாற்றமும் இல்லை. நாடே எதிர்பார்க்கும் 20 ம் தேதி! ஏவுகணை கிளம்ப சில நிமிடங்கள் இருக்க, படபடப்புடன் அனைவரும் பார்த்துக்கொண்டு இருக்கும் போது அதில் உள்ள தொழில்நுட்ப பிரச்சனையால் திட்டம் ரத்து செய்யப்படுகிறது. இதை ஊடகங்கள் கிண்டல் செய்கின்றன.

இந்தத் தோல்வியால் அனைவரும் துவண்டு விடுகிறார்கள். அதற்கு கலாம் “எஸ் எல் வி முயற்சியில் நாங்கள் கஷ்டப்பட்டு உருவாக்கிய செயற்கைக்கோள் கடலில் விழுந்து விட்டது ஆனால், உங்களுக்கு அது போல நடக்காமல் உங்கள் கண் முன்னே முழுதாக இருக்கிறது. எனவே துவண்டு விடாமல் திரும்பக் கடுமையாக முயற்சியுங்கள்“ என்று தன் அனுபவத்தை வெளிப்படுத்துகிறார்.

கடுமையான போராட்டம்

திரும்ப அனைவரும் தூக்கம் இல்லாமல் கடுமையாக உழைக்கிறார்கள். யாருக்கும் இதைத் தவிர வேறு எந்தச் சிந்தனையும் இல்லை. திரும்ப 1989 மே 1 நாள் (பத்து நாட்களில்) குறிக்கப்படுகிறது. கிளம்ப 10 நொடி இருக்கும் போது திரும்பப் பிரச்சனை. திட்டம் ரத்து செய்யப்படுகிறது. “வெளிநாடுகளில் இது சகஜம் ஆனால், ஆர்வமாக உள்ள தேசம் எங்களின் பிரச்சனைகளை புரிந்து கொள்ளவில்லை” என்று வருத்தமாகக் குறிப்பிடுகிறார். உண்மையில் அப்போது அங்கு இருந்தவர்களின் மனநிலை எப்படி இருந்து இருக்கும் என்று யோசித்தால், மிகவும் பாவமாக இருக்கிறது.

இந்தச் சோதனையின் போது மக்களை வெளியேற்றுவதால், அதற்கு மக்களுக்கு இழப்பீடு போல பணம் கொடுத்து இருக்கிறார்கள். இதை ஊடகங்கள் “இப்படியே அடிக்கடி செய்தால் ஒரு புதிய வீடு கட்டி விடலாம்” என்பதைப் போல கேலி சித்திரம் வரைந்து இருக்கிறார்கள். இது அல்லாமல் பலரும் வாசகர்களுக்கு தீனி போட கிண்டல் கேலி என்று இவர்களை மிகவும் புண்படுத்தி இருக்கிறார்கள்.

பிறகு பல கடுமையான முயற்சிகளுக்குப் பிறகு தவறுகள் களையப்பட்டு அடுத்த முயற்சியாக 1989 மே 22 ல் அக்னி கிளம்ப (20 நாட்களில்) திட்டமிடப்படுகிறது. பாதுகாப்பு அமைச்சர் கே சி பந்த் “கலாம்! நாளை அக்னி வெற்றியை கொண்டாட நான் என்ன செய்ய வேண்டும் என்று விரும்புகிறீர்கள்?” என்று கேட்க.. அதற்கு என்ன பதில் கூறுவது என்று தெரியாமல், பின் யோசித்து RCI ல் [Research Centre Imarat] நட ஒரு லட்சம் மரக்கன்றுகள் வேண்டும் என்று கேட்டு இருக்கிறார். கலாம் அப்போது இருந்தே இயற்கையில் ஆர்வம் கொண்டு இருந்ததை அறிந்து கொள்ளலாம். இது போல ஆராய்ச்சி நிலையம் அமைக்கும் இடத்தில் பறவைகளுக்கு தொந்தரவு இல்லாமல் அமைக்கும் படியும் ஒரு இடத்தில் கூறி இருக்கிறார்.

அக்னி

அன்று தட்ப வெட்ப நிலை சரியில்லை, புயல் அபாயம் என்று வானிலை பயமுறுத்தியது ஆனால், இந்த முறை வெற்றிகரமாக “அக்னி” பாய்ந்து விடுகிறது. எங்களுடைய ஐந்து வார மன உளைச்சலை 600 நொடியில் சடாரென்று துடைத்து விட்டதாக குறிப்பிடுகிறார். அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தி, குடியரசுத் தலைவர் ஆர் வெங்கட்ராமன் ஆகியோர் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவிக்கிறார்கள்.

மேற்கு ஜெர்மனியின் உதவியுடன் இந்த ஏவுகணையை தயாரித்து இருப்பதாக மற்ற நாடுகள் குற்றம் சாட்டுகின்றன. இது சுதேசி ஏவுகணை என்பதை யாரும் நம்பத் தயாராக இல்லை. கலாம் வேலப்ஸ் தீவில் நான்கு மாதம் இருந்த போது இந்த தொழில்நுட்பத் தகவல்களைத் திருடி விட்டதாக அமெரிக்க செனட் சபை, மேற்கத்திய ஊடகங்கள் கூறுகின்றன. இதற்கு கலாம் “நான் அங்கு சென்ற போது இந்த தொழில்நுட்பமே வரவில்லை” என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

கலாம் சோதனையில் ஈடுபட்டு இருந்த போது திரைப்படங்களில் வருவது போல உடன் பணி புரிவரின் வியர்வைத் துளி அமிலத்தில் விழுந்ததால், வெடி விபத்து ஏற்பட்டு உயிர் தப்பியதைக் கூறுகிறார். இதில் தீக்காயம் ஏற்பட்டவருக்கு மருத்துவமனையில் சேர்க்க படுக்கை வசதி கூட இல்லை என்று குறிப்பிட்டு இருக்கிறார். இது மட்டுமல்ல கலாம் பேருந்தில் செல்வது மற்றும் பல செய்திகளைப் படிக்கும் போது இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த பணியில் இருக்கும் நபருக்கு எப்படி வசதிகள் கொடுக்கப்படாமல் இருந்தது என்று ஆச்சர்யமாக இருக்கிறது. (கொடுத்து இவர் வேண்டாம் என்று கூறி விட்டாரா என்பதும் புரியவில்லை).

பொக்ரான் பற்றிய தகவல்கள் இல்லை

இதன் பிறகு பொது வாழ்க்கைக்கு வருவது பற்றி கூறுகிறார். “பொக்ரான் அணுகுண்டு சோதனை” பற்றி புத்தகத்தில் தகவல்கள் இல்லை.

உலக போலிஸ் அமெரிக்கா கண்ணில் மண்ணைத் தூவி அவர்கள் செயற்கைக்கோள் கண்காணிக்கும் நேரத்தை கணித்து யாருக்குமே தெரியாமல் இந்த சோதனை நடத்தப்பட்டது. பின் இதை பிரதமர் “வாஜ்பாய்” அறிவித்த பிறகு தான் அனைவருக்கும் தெரிந்து உலகமே அதிர்ச்சியில் ஆழ்ந்தது. இந்தியனாக ஒவ்வொருவரும் பெருமைப்பட்ட காலங்கள் அவை. அணு ஆயுத சோதனைக்காக அமெரிக்கா, இந்தியாவிற்கு பொருளாதாரத் தடை கூட விதித்தது. இந்தப் புத்தகம் எழுதப்பட்ட ஆண்டு 1999, பொக்ரான் அணுகுண்டு சோதனை நடந்த வருடம் 1998.

அதோடு 1991 ம் ஆண்டு தன்னுடைய 60 வது வயதில் அவரது பணிக்காலம் முடிந்து மூன்று வருடம் நீட்டிப்பு பெற்றது. ஆக, இவருடைய அதிகாரப்பூர்வ அரசுப் பணிக்காலம் 1994 உடன் முடிந்து விட்டது.

புத்தகம் எப்படி இருக்கிறது?

புத்தகம் படிக்க எளிமையாக இருக்கிறது என்று கூற முடியாது. காரணம், நமக்கு பல விஷயங்கள் புரியாதது தான் ஆனால், துவக்க காலத்தில் ஒவ்வொருவரும் எவ்வளவு கஷ்டப்பட்டு இருக்கிறார்கள் என்பதை நாம் நிச்சயம் தெரிந்து கொள்ளலாம் / கொள்ள வேண்டும்.

அதோடு இன்னும் செயற்கைக்கோள், ஏவுகணை எல்லாம் மக்கள் வரிப் பணத்தை வீணடிக்கும் செயல், மக்கள் பசியால் சாகும் போது இதெல்லாம் அவசியமா என்று கேட்பவர்கள் அவசியம் படிக்க வேண்டிய புத்தகம். தடுக்க வேண்டியது ஊழல் தானே தவிர இது போல தொழில் நுட்பங்கள் அல்ல.

நம் நாட்டின் பாதுகாப்பின் பின்னால் இந்த ஏவுகணைகளின் பயன்பாடும், நாம் பயன்படுத்தும் ஒவ்வொரு வசதியின் பின்பும் இது போல ஒரு செயற்கைக் கோளின் பணியும் உள்ளது என்பதை உணர வேண்டும்.

அப்துல் கலாம் ஐயா! தங்களால் இந்தியா பெருமையடைந்தது, தமிழர்கள் பெருமையடைந்தோம். தங்களின் உழைப்பை, நாட்டிற்கு தாங்கள் ஆற்றிய நற்பணியை இந்த உலகம் உள்ளவரை நினைவு கூறும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை.

அப்துல் கலாமின் உரை

2020ம் ஆண்டில் இந்தியா வளர்ந்த நாடாக, வல்லரசு நாடாக திகழும். நம்முடைய இளைஞர்களின் துணையுடன், திறமையான, வெளிப்படையான நிர்வாகமும், அப்பழுக்கற்ற, ஊழலற்ற ஆட்சியும் இருந்தால் நிச்சயம் நாம் 2020ம் ஆண்டில் வல்லரசு நாடாக மாறி விடுவோம் என்று உறுதி பட சொன்னவர் மறைந்த குடியரசுத்தலைவர் டாக்டர் ஏ.பி.ஜெ. அப்துல்கலாம்.

குடியரசுத்தலைவராக இருந்த டாக்டர் அப்துல்கலாம் நாட்டுமக்களுக்காக 2007ம் ஆண்டு ஆற்றிய உரை:

நாட்டில் உள்ள 25 வயதுக்குட்பட்ட 54 கோடி பேரையும் ஊக்கப்படுத்தி உத்வேகத்துடன் அவர்களை சரியான பாதையில் நடைபோட வைக்க வேண்டும். அவர்களுக்கு சிறந்த கல்வி கிடைக்கச் செய்ய வேண்டும். அவர்களுடைய ஆளுமைத் திறனை மேம்படுத்த வேண்டும்.

இளைஞர்கள்தான் இந்த உலகின் மாபெரும் சக்தி. வளர்ந்த, வல்லரசு இந்தியாவில் நகர்ப்புற, கிராமப்புற வித்தியாசம் மிகவும் குறைவாக இருக்கும். மின்சாரமும், தரமான குடிநீரும் அனைவருக்கும் கிடைக்கும். விவசாயம், தொழில்துறை, சேவைத் துறை இணைந்து செயல்படும். கல்விக்கு சிறந்த முக்கியத்துவம் அளிக்கப்படும்.

வாழ்க்கைக்குத் தேவையான கல்வி கற்பிக்க வசதி கிடைக்கும். கல்வியாளர்கள், ஆய்வாளர்கள், முதலீட்டாளர்கள், விஞ்ஞானிகளுக்கு ஏற்ற நாடாக இந்தியா விளங்கும். உலகிலேயே சிறந்த மருத்துவ வசதிகள் வளர்ந்த இந்தியாவில் அபரிமிதமாக இருக்கும்.

அரசு நிர்வாகம் பொறுப்பானதாக, வெளிப்படையானதாக, ஊழலற்றதாக இருக்கும். வறுமை அறவே ஒழிந்திருக்கும். கல்லாமை இல்லை என்ற நிலையில் இருக்கும். பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றச் செயல்கள் அறவே இல்லாதிருக்கும்.

சமுதாயத்தின் அனைத்து உறுப்பினர்களுக்கும் அனைத்து வசதிகளும் கிடைக்கும். புறக்கணிப்பு என்ற பேச்சுக்கே இடமிருக்காது. இப்படிப்பட்ட ஒரு வளர்ந்த, வல்லரசு நாடாக இந்தியா நிச்சயம் மாறும். மிகச் சிறந்த திறமை வாய்ந்த அரசு நிர்வாகம் உள்ள நாடாக, அமைதியான நாடாக, அனைவரும் வசிக்க ஆசைப்படும் அழகிய நாடாக நமது இந்தியா நிச்சயம் மாறும்.

நமது நாட்டில் இரண்டாவது பசுமைப் புரட்சி வர வேண்டும். தங்களது வளமான நிலங்களைப் பாதுகாக்க விவசாயிகளுக்கு முழு சுதந்திரமும், சக்தியும் கொடுக்க வேண்டும்.

விவசாய நிலங்கள் பாழ்பட்டுப் போக அனுமதிக்கக் கூடாது. விவசாயிகளும், விவசாய விஞ்ஞானிகளும், தொழிற்சாலைகளும் இணைந்து சீரிய முறையில் உழைத்தால், நமது விவசாய பொருளாதார வளர்ச்சியை ஆண்டுக்கு 4 சதவீதம் அதிகரிக்க முடியும் என்றார் கலாம்.

கல்பனா சாவ்லா-விஞ்ஞானி

 



Kalpana-Chawla

விண்வெளிக்கு பயணம் செய்த இந்தியாவின் முதல் பெண்மணி என்ற பெருமைக்குரிய கல்பானா சாவ்லா, பல பெண்களுக்கு ஒரு முன் மாதிரியாகத் திகழ்கிறார் என்றால் அது மிகையாகது. ஒரு சாதாரணப் பள்ளியில் படித்து, பலர் வியக்கும்படி தன் கனவுகளை ஒரு விண்வெளி பொறியாளராக வாழ்ந்துக் காட்டினார் கல்பனா சாவ்லா. 41வது வயதில் உலக மக்களின் நட்சத்திரமாகிப் போன ஒரு இந்தியப் பெண் வீராங்கனையின் வாழ்க்கை வரலாறு மற்றும் சாதனைகளைப் பற்றி விரிவாகக் காண்போம்.

பிறப்பு: ஜூலை 1, 1961

இடம்: கர்னல், ஹரியானா (இந்தியா)

பணி: அறிவியலாளர்

இறப்பு: பிப்ரவரி 1, 2003

பிறப்பு:

கல்பனா சாவ்லா அவர்கள், இந்தியாவிலுள்ள ஹரியானா மாநிலத்தில் கர்னல் என்ற ஊரில் ஜூலை 1, 1961 ஆம் ஆண்டு, பனாரஸ் லால் சாவ்லாவுக்கும், சன்யோகிதா தேவிக்கும் மகளாக, ஒரு பஞ்சாபி குடும்பத்தில் பிறந்தார். இவருக்கு சுனிதா மற்றும் தீபா என்ற இரண்டு சகோதரிகளும், சஞ்சய் என்ற சகோதரனும் இருந்தனர்.

ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி:

கல்பானா சாவ்லா, தனது ஆரம்ப கல்வியை கர்னலில் உள்ள அரசு பள்ளியில் தொடங்கினார். 1982 ஆம் ஆண்டு சண்டிகரில் உள்ள “பஞ்சாப் பொறியியல் கல்லூரியில்” விமான ஊர்தியியல் துறையில் கல்விப் பயின்று இளங்கலைப் பட்டமும் பெற்றார். பின்னர், 1984 ஆம் ஆண்டு அமெரிக்காவில் உள்ள “டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில்” விண்வெளிப் பொறியியல் துறையில் முதுகலைப் பட்டம் பெற்றார். 1986ல் பௌல்தேரில் உள்ள “கோலோரடோ பல்கலைக்கழகத்தில்” இரண்டாவது முதுகலைப் பட்டமும், பிறகு 1988ல் வெண்வெளி பொறியியல் துறையில் முனைவர் பட்டமும் பெற்றார்.

விண்வெளி பயணம்:

1988 ஆம் ஆண்டு, நாசா அமெஸ் ஆராய்ச்சி கூடத்தில் “ஒசெர்செட் மேதொட்ஸ் இன்க்யின்” துணைத்தலைவராக பணியாற்றிய அவர் வி/எஸ்.டி.ஓ.எல் (V/STOL) இல் சி.எஃடி (CFD) ஆராய்ச்சி செய்தார். விமானம் மற்றும் கிளைடர்களை ஓட்டக் கற்றுக்கொடுக்க தகுதிச் சான்றிதழ் பெற்றதோடு மட்டுமல்லாமல், ஓட்டவும் அனுமதி பெற்றிருந்தார். ஃப்க் க்ட்5ஏசி என்ற அடையாளத்துடன் தரும் டெக்னிசியன் கிளாஸ் அமெச்சூர் ரேடியோ அனுமதியும் பெற்றிருந்தார். 1995 ல் நாசா விண்வெளி வீரர் பயிற்சிக் குழுவில் சேர்ந்த அவர், அடுத்த இரண்டு ஆண்டுகளில் “கொலம்பிய விண்வெளி ஊர்தியான எஸ்.டி.எஸ்-87 (STS-87) இல்” பயணம் செய்வதற்குத் தேர்வு செய்யப்பட்டார். 1997 ஆம் ஆண்டு மேற்கொண்ட இந்த பயணத்தில், சுமார் 372 மணி நேரம் வெண்வெளியில் இருந்து சாதனைப் புரிந்து வெற்றிகரமாக பூமி திரும்பினார். இதன் மூலம் விண்வெளிக்குச் சென்ற முதல் இந்தியப் பெண் என்ற பெருமையும் பெற்றார்.

கொலம்பியா விண்கல நிகழ்வு:

முதல் விண்வெளிப் பயணத்தை வெற்றிகரமாக முடித்த கல்பனா சாவ்லா, அடுத்த ஐந்து ஆண்டுகளில் தன்னுடைய இரண்டாவது பயணத்திற்குத் தயாரானார். 2000 மற்றும் 2002  ஆம் ஆண்டுகளில் மேற்கொள்ளகூடிய இந்த பயணம் பலதரப்பட்ட தொழில்நுட்பக் கோளாறுகளால் காலம் கடத்தப்பட்டது. பின்னர், 2003-ம் ஆண்டு ஜனவரி 16-ந் தேதி விண்வெளி ஆராய்ச்சிக்காக, அமெரிக்காவின் கென்னடி நிலையத்திலிருந்து கொலம்பியா விண்கலம் எஸ்.டி.எஸ்-107 (STS-107) அனுப்பி வைக்கப்பட்டது. இந்திய வம்சாவளி பெண்ணாகிய கல்பனா சாவ்லா உள்ளிட்ட 7 பேர் அதில் பயணித்தனர். 16 நாள் ஆய்வை முடித்து வெற்றிகரமாக பூமிக்குத் திரும்பிய அவர்கள் சென்ற அந்த விண்கலம், அமெரிக்காவின் டெக்ஸாஸ் வான்பரப்பில் வெடித்துச் சிதறியது. கல்பனா சாவ்லா உள்பட ஏழு விலைமதிப்பற்ற விண்வெளி வீரர்களும் பலியாகினர்.

ஒரு சாதாரணப் பள்ளியில் படித்து, பலர் வியக்கும்படி தன் கனவுகளை நனவாக்கி வாழ்ந்து காட்டியவர் கல்பனா சாவ்லா. பெண்ணினத்தின் பெருமைக்கு எடுத்துக்காட்டாய் விளங்கிய அவர், இந்தியாவிற்கு உலகப் புகழ் சேர்த்தவர் என்றால் அது மிகையாகாது. ‘கனவுகளைக் கண்டு அந்த கனவுகளை நனவாக்குவதற்கு விடா முயற்சியோடும், முழுமனதோடும் செயல்பட்டால் வெற்றி நிச்சயம்’ என்ற உண்மையை உலகிற்கு உணர்த்தி சென்ற வீரப் பெண்ணை நாமும் போற்றுவோம்.

விருதுகளும் அங்கீகாரங்களும்:

  • நியூயார்க்கில் உள்ள ஒரு தெருவிற்கு “கல்பனா வே” என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
  • இளம் பெண் விஞ்ஞானிகளை ஊக்குவிக்க கர்நாடக அரசாங்கம் “கல்பனா சாவ்லா விருதினை” 2004 ஆம் ஆண்டிலிருந்து வழங்கி வருகிறது.
  • நாசா ஆய்வகம், கல்பனா சாவ்லாவின் நினைவைப் பறைசாற்றும் விதமாக ஒரு அதிநவீன கணினியை அற்பணித்துள்ளது.
  • காங்கிரேஷனல் ஸ்பேஸ் மெடல் ஆப் ஆனர் விருது.
  • நாசா ஸ்பேஸ் பிளைட் மெடல்
  • நாசா டிஸ்டிங்குவிஷ்ட் சர்வீஸ் மெடல்
  • டிபென்ஸ் டிஸ்டிங்குவிஷ்ட் சர்வீஸ் மெடல்

இந்தியாவில் பல கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசாங்கப் பொது நிறுவனங்களுக்கு, கல்பனா சாவ்லாவின் நினைவைப் பறைசாற்றும் வகையில் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

காலவரிசை:

1961 – ஜூலை 1, கர்னல் என்ற ஊரில் பிறந்தார்.

1982 – மேற்படிப்பிற்காக அமெரிக்கா பயணம்.

1983 – ஜீன் பிஎர்ரே ஹாரிசன் என்ற விமானப் பயிற்சி ஆசிரியரை மணமுடித்தார்

1984 – அர்லிங்க்டோனில் உள்ள டெக்சாஸ் பல்கலைக்கழகத்திலிருந்து விண்வெளி பொறியியலில் முதுகலைப் பட்டத்தை பெற்றார்.

1988 – விண்வெளி பொறியியலில் முனைவர் பட்டத்தையும், நாசா அமெஸ் ஆராய்ச்சி கூடத்தில் “ஒசெர்செட் மேதொட்ஸ் இன்க் இல்” துணைத் தலைவராகவும் பொறுப்பேற்றார்.

1995 – நாசா விண்வெளி வீரர் பயிற்சி குழுவில் சேர்ந்தார்

1996 – கொலம்பிய விண்வெளி ஊர்தியான STS-87 இல் பயணம் செய்ய தேர்வு செய்யப்பட்டார்.

1997 – கல்பனாவின் முதல் விண்வெளி பயணம் “கொலம்பிய விண்வெளி ஊர்தியான STS-87 இல்” பயணம் செய்தார்.

2000 – கல்பனா STS-107 இல் பயணிக்கத் தேர்ந்தெடுக்கப்பட்டார்

2003 – கொலம்பியா விண்கலம் STS-107 அமெரிக்காவின் டெக்ஸாஸ் வான்பரப்பில் வெடித்துச் சிதறி கல்பனா சாவ்லா உள்பட ஏழு விண்வெளி வீரர்களும் பலியாகினர்.   

Monday, October 30, 2023

பழமைவாய்ந்த அரிசி வகைகளும் நன்மைகளும்

 #அரிசி! 


1. கருப்பு கவுணி அரிசி:

மன்னர்கள் சாப்பிட்ட அரிசி. புற்றுநோய் வராது. இன்சுலின் சுரக்கும்.


2. மாப்பிள்ளை சம்பா அரிசி 😗

நரம்பு, உடல் வலுவாகும். ஆண்மை கூடும்.


3. பூங்கார் அரிசி 😗

சுகப்பிரசவம் ஆகும். தாய்ப்பால் ஊறும்.


4. காட்டுயானம் அரிசி 😗

நீரிழிவு, மலச்சிக்கல், புற்று சரியாகும்.


5. கருத்தக்கார் அரிசி 😗

மூலம், மலச்சிக்கல் போன்றவை சரியாகும்.


6. காலாநமக் அரிசி 😗

புத்தர் சாப்பிட்டது. மூளை, நரம்பு, இரத்தம், சிறுநீரகம் சரியாகும்.


7. மூங்கில் அரிசி

மூட்டுவலி, முழங்கால் வலி சரியாகும்.


8. அறுபதாம் குறுவை அரிசி 😗

எலும்பு சரியாகும்.


9.இலுப்பைப்பூ சம்பா அரிசி 😗

பக்கவாதத்திற்கு நல்லது. கால்வலி சரியாகும்.


10. தங்கச்சம்பா அரிசி 😗

பல், இதயம் வலுவாகும்.


11. கருங்குறுவை அரிசி 😗

இழந்த சக்தியை மீட்டுத் தரும். கொடிய நோய்களையும் குணப்படுத்தும்.


12. கருடன் சம்பா அரிசி 😗

இரத்தம், உடல், மனம் சுத்தமாகும்.


13. கார் அரிசி 😗

தோல் நோய் சரியாகும்.

 

14. குடை வாழை அரிசி 😗

குடல் சுத்தமாகும்.


15. கிச்சிலி சம்பா அரிசி 😗

இரும்பு சத்து, சுண்ணாம்பு சத்து அதிகம்.


16. நீலம் சம்பா அரிசி 😗

இரத்த சோகை நீங்கும்.


17.சீரகச் சம்பா அரிசி 😗

அழகு தரும். எதிர்ப்பு சத்தி கூடும்.


18. தூய மல்லி அரிசி 😗

உள் உறுப்புகள் வலுவாகும்.

 

19. குழியடிச்சான் அரிசி 😗

தாய்ப்பால் ஊறும்.


20.சேலம் சன்னா அரிசி 😗

தசை, நரம்பு, எலும்பு வலுவாகும்.


21. பிசினி அரிசி 😗

மாதவிடாய், இடுப்பு வலி சரியாகும்.

 

22. சூரக்குறுவை அரிசி 😗

பெருத்த உடல் சிறுத்து அழகு கூடும்.

 

23. வாலான் சம்பா அரிசி 😗

சுகப்பிரசவம் ஆகும். பெண்களுக்கு அழகு கூடி இடை மெலியும். இடுப்பு வலுவாகும். ஆண்களுக்கு விந்து சக்தி கூடும்.


24. வாடன் சம்பா அரிசி 😗

அமைதியான தூக்கம் வரும்.