ஒரு நாட்டில் கடுமையான பஞ்சம் ஏற்பட்டது. அந்த நாட்டில் உணவுப் பற்றாக்குறையால் மக்கள் அவதிப்பட்டார்கள். இதனால் அந்நாட்டு அரசனிடம் சென்று முறையிட்டார்கள்.
பஞ்சத்தைத் தீர்க்க அரசனும் யோசித்தான். அவனுக்கு மிகவும் மோசமான யோசனை தோன்றியது.
மக்கள் தொகை குறைந்தால் பஞ்சமும் குறையும் என்று நினைத்தான்.
"எழுபது வயதுக்கு மேல் உள்ள பெரியவர்கள் யாரும் உயிருடன் இருக்கக் கூடாது. அவர்களுக்கு வேலை செய்யும் ஆற்றல் இல்லை. ஆனால் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள். இதனால்தான் பஞ்சம் ஏற்படுகிறது. எனவே எழுபது வயதுக்கு மேலிருக்கும் அனைவரையும் கொன்றுவிட வேண்டும் என்று உத்தரவிட்டான்.
மக்கள் அனைவரும் அழுது புலம்பினார்கள்.
அரசனின் உத்தரவை மீற முடியாமல் வீட்டிலிருந்த பெரியவர்களைக் கொன்று புதைத்தனர்.
பிறகும் பஞ்சம் தீர்ந்தபாடில்லை.
மக்கள் தாங்கள் வைத்திருந்த விதை நெல்லை அவித்து, அரிசியாக்கிச் சாப்பிட்டார்கள்.
திடீரென்று மழை வரும் போல் தோன்றியது.
ஒருவன் மட்டும் தனது தந்தையை யாருக்கும் தெரியாமல் வீட்டிலிருந்த பாதாள அறையில் மறைத்து வைத்திருந்தான்.
அவன் தந்தையிடம் சென்று, "அப்பா! மழை வரும் போலிருக்கிறது. ஆனால் விதைக்க விதை நெல் இல்லை" என்று வருத்தத்துடன் சொன்னான். "கவலைப்படாதே மகனே" என்ற பெரியவர் "நீ உன் நிலத்தை உழுது போடு" என்றார். அதன்படி அவனும் நிலத்தைம் உழுதான்.
அடுத்த நாள் மழை பெய்தது. இரண்டு நாட்களில் பயிர் முளையிட்டது. செழிப்பாக வளர்ந்தது. அந்த ஊருக்கே சாப்பாடு போட்டது.
அரசன் மிகவும் மகிழ்ந்து போய் அவனை அழைத்து வரச் செய்தான். "விதைக்காமல் உன் நிலம் எப்படி விளைந்தது?" என்று கேட்டான்.
என் அப்பா சொன்னபடி செய்தேன். நிலத்தில் பயிர் விளைந்தது. என்றும் தன் தந்தையை வீட்டில் பாதாள அறையில் மறைத்து வைத்திருக்கும் தகவலையும் சொன்னான்.
பெரியவரை அழைத்து வரும்படி தனது வீரர்களிடம் தெரிவித்தான். அவர்களும் போய் அழைத்து வந்தார்கள்.
அரசன் அந்தப் பெரியவரிடம், "விதையில்லாமல் நிலத்தை வெறுமனே உழுது போட்டால் பயிர் முளைக்கும் என்று எப்படி சொன்னீர்கள்?" என்று கேட்டான்.
"எலிகளும், எறும்புகளும் தங்கள் தேவைகளுக்காக தானியங்களைச் சேர்த்து வைத்திருக்கும். அந்நிலத்தை உழும் போது அவை எல்லாம் வெளியில் வந்துவிடும். மழை பெய்ததும், பயிராகி விடும்" என்றும் பெரியவர் சொன்னார்.
"ஆ, இப்படி அரிய பல யோசனைகளை அனுபவப்பூர்வமாகச் சொல்லும் பெரியவர்களை எல்லாம் கொல்லும்படி உத்தரவிட்டுத் தவறு செய்து விட்டேனே.." என்று அரசன் வருந்தினான்
No comments:
Post a Comment