Wednesday, January 3, 2024

அடித்தாலும் அணைத்தாலும் நீ தான் என் அம்மா


ஒரு நாள் அலுவலகத்திற்கு புறப்பட்டுக் கொண்டிருக்கையில் என் மகள் காலை உணவு உண்ண அடம் பிடித்துக் கொண்டிருந்தாள். அம்மா ஊட்டி விட்டா தான் சாப்பிடுவேன் என்று. சரி வா என்று அவசர அவசரமாக உணவு ஊட்டினேன். கடைசி வாய் உணவு ஊட்டுகையில் என் கையை நறுக்கென்று கடித்து விட்டாள். வலி பொறுக்காமல் கன்னத்தில் ஒரு அறை அறைந்துவிட்டு வேக வேகமாக அலுவலகத்திற்கு சென்றுவிட்டேன். என் மகள் தவறு செய்தால் கூட திட்டுவேனே ஒழிய அவளை அடித்ததில்லை.. அவளை அடித்தது மிகவும் உறுத்தலாகவே இருந்தது.
“அவளை அடித்ததாலோ என்னவோ தெரியவில்லை அன்று முழுக்க நான் எந்த ஒரு செயலை செய்தாலும் அது தவறாகவே முடிந்தது..”

மனது முழுக்க என் மகளின் நினைப்பு தான். நான் அவளை அடித்த கோவத்தில் எங்கு என்னோடு பேசாமல் போய்விடுவாளோ என்று நடுக்கம். எப்படி அவளை எதிர்கொள்ள போகிறேன் என்று தெரியாமல் தவித்தேன். அலுவலகம் முடிந்ததும் அவளுக்கு பிடித்த பொருட்களை வாங்கிக்கொண்டு வீட்டிற்கு சென்றேன். வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்தாள். என்ன செல்லம் என்ன பண்ணுறீங்கனு கேக்க யாமினி பதிலே பேசாமல் நின்று கொண்டிருந்தாள். வாங்கிய பொருட்களை கொடுத்தேன் வாங்க மறுத்தாள். அய்யோ பிள்ளைய அடித்ததுனால கோவத்துல நம்மகிட்ட பேச மாட்டேங்கிறாளேன்னு மனவருத்தம் அடைந்தேன். என் மகளிடம் சென்று நீ ஏண்டா அம்மாவ கடிச்ச அம்மாவுக்கு வலிச்சது அதுனால தான் வலி தாங்காம அடிச்சுட்டேன் அம்மாவை ரெண்டு அடி வேணாலும் அடிச்சுடு பேசாம இருக்காதடானு சொன்னதும் உங்ககிட்ட ஒன்னு கேக்கணும் அம்மா ? என்றாள்… என்னடா கேளு என்றேன். அலுவலகத்திற்கு சென்றவுடன் நீங்கள் ஒரு தடவையாவது என்னை நினைப்பீர்களா என்று கேட்டாள். இல்ல டா அலுவலக வேலைகள் அதிகம் அதனால் யாரையுமே நினைக்க மாட்டேன் என் வேலைகளை தான் நினைப்பேன் என்றேன். இன்று என்னை நினைத்தீர்களா ?? என்று கேட்டாள்… இன்று முழுவதும் உன்னை பற்றி தான் நினைத்தேன், உன்னை அடித்துவிட்டேனே என்று உன்னை நினைத்து வருந்திக்கொண்டே இருந்தேன் என்றேன்.

“உங்களோடு என்னால் ஒரு நாள் முழுவதும் செலவிட முடியவில்லை என் நினைவாவது உங்களோடு நாள் முழுக்க இருக்க வேண்டும் என்று நினைத்தேன் அதனால் தான் கடித்தேன்” என்று சிரித்தபடி பதில் அளித்தாள். நான் பிறக்கும் பொது நான் உனக்கு கொடுத்த வலியை விடவா நீ அடித்தது எனக்கு வலித்து விட போகிறது??? நீ என்னை அடித்தாலும் அணைத்தாலும் நீ தான் என் செல்ல அம்மா எனக்கு உன்ன “ரொம்ப பிடிக்கும் அம்மா” என்று என்னை “முத்தம் கொஞ்சினாள்”.

No comments:

Post a Comment