Thursday, January 4, 2024

குழந்தைகளுக்கு நல்ல பழக்கங்களை கற்றுக் கொடுங்கள்


1. வாசிக்கும் பழக்கத்தைப் பள்ளி செல்லும் வயதிலேயே குழந்தைகளுக்கு அறிமுகம் செய்ய வேண்டும். நீண்ட நேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்து புத்தகத்தைப் படிக்கப் பழகிக்கொள்வது அவர்களின் கல்வி உயர்வுக்கும் உதவும். புத்தகங்களின் மூலம் அவர்களின் அறிவும் வளரும்.




2. உட்கார்ந்த இடத்திலேயே விளையாடும் வீடியோ கேம்களைப் பழக்காமல், வீட்டுக்கு வெளியில் சென்று வெயிலில் விளையாட அவர்களைப் பழக்குங்கள். அவர்களுக்கு அதில் உற்சாகமும் கிடைக்கும். மற்ற குழந்தைகளுடன் இணைந்து விளையாடுவதால், சமூகத்தில் பழகும் குணமும் பெறுவார்கள். உடலும் நலமாக இருக்கும். கை, கால்களின் இயங்குதிறனும் சிறப்பாக வளரும்.




3. பணத்தைச் சேமிக்கக் கற்றுக்கொடுங்கள். பணத்தின் மதிப்பையும் உணர்வார்கள். தங்கள் கண்ணெதிரே உயரும் சேமிப்பைப் பார்த்து, சேமிக்கும் பழக்கத்தையும் பெறுவார்கள்.




4. டி.வி. கம்ப்யூட்டர், செல்போன் என்று ஒளிரும் ஏதோ ஒரு திரையைப் பார்த்தபடியே இன்றைய குழந்தைகள் வளர்கின்றனர். அவற்றுக்கு அடிமையாகவிடாமல், நேரக் கட்டுப்பாட்டை அறிமுகம் செய்யுங்கள்.




5. எல்லாவற்றிலும் ஒழுங்கைக் கடைப்பிடிக்க அவர்களைப் பழக்குங்கள். பொம்மைகளைப் பிரித்துவைத்து விளையாடினால், மீண்டும் அவற்றை அடுக்கி வைக்கச் சொல்லுங்கள். படித்து முடித்ததும் புத்தகங்களை ஒழுங்காகப் பையில் அடுக்கி வைப்பது, தூங்கி எழுந்ததும் படுக்கையை ஒழுங்குபடுத்துவது என்று பழகினால், எல்லாவற்றையும் திட்டமிட்டு ஒழுங்காகச் செய்யும் திறமை அவர்களுக்குக் கிடைக்கும்.




6. தூங்கி எழுவது, குளிப்பது, சாப்பிடுவது, விளையாடுவது, படிப்பது என்று எல்லாவற்றையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வதற்கு அவர்களைப் பழக்குங்கள். அவர்களுக்குச் சோம்பல் பழகாது. எதையும் குறிப்பிட்ட நேரத்துக்குள் செய்வதற்குப் பழகிக்கொள்வர்கள்.




7. தாங்கள் இருக்கும் இடத்தையும் தங்களையும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். ஆரோக்கியமான உணவு, இனிமையான தூக்கம், வியர்வை சிந்தும் விளையாட்டு என்று உடல்நலனுக்கு உகந்த வாழ்க்கைமுறையை அவர்களுக்கு அறிமுகம் செய்யுங்கள்.




8. பல் துலக்குவது, குளிப்பது, முறையாகக் கை கழுவுவது, உணவை வீணடிக்காமல் சாப்பிடுவது, வாயை மூடிக்கொண்டு இருமுவது, வெளியிலிருந்து வீட்டுக்குள் வந்ததும் கால்களைக் கழுவுவது என்று சுகாதாரமான நாகரிகங்களைக் குழந்தைகளுக்குக் கற்றுக்கொடுங்கள். வளர்ந்த பிறகு அவர்களை எல்லோரும் மதிப்பார்கள்.




9. அக்கம்பக்கக் குடும்பத்தினர், தங்கள் வயதில் இருக்கும் குழந்தைகள் என்று எல்லோருடனும் நட்பாகவும் அன்பாகவும் பழகச் சொல்லுங்கள். நட்புகளை உருவாக்கிப் பராமரிப்பது வாழ்க்கை முழுக்கத் தேவைப்படும் ஒரு பண்பு.




10. நேரத்தைச் சரியாகப் பயன்படுத்திக் கடின உழைப்பைக் கொடுக்க அவர்களைப் பழக்குங்கள். நேர்மையாகவும் உண்மையாகவும் இருப்பதன் மூலம் கிடைக்கும் மதிப்பை அவர்களுக்கு உணர்த்துங்கள். அவர்களை இது வாழ்க்கையில் உயர்த்தும்.

No comments:

Post a Comment