Wednesday, January 3, 2024

3 சனவரி 1760 , வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த தினம்

*வீரபாண்டிய கட்டபொம்மன்*

*264*'வது *பிறந்த தினம்*

*3 சனவரி 1760* இன்று..


அவர் வரலாற்றின் சில சம்பவங்களை அதன் சிறப்பு கெடாமல் முடிந்த அளவு சுருக்கி தொகுத்து வழங்கியுள்ளேன்.!


பொம்மு நாயக்கர்கள் வம்ச வரலாறு.!


அழகிய வீரபாண்டியபுரம் எனும் ஊரில் (இன்றைய ஒட்டபிடாரம்) ஆட்சி புரிந்து வந்த ஜெகவீர பாண்டியனின் அவையில் அமைச்சராக பொம்மு என்கிற *கெட்டி பொம்மு* இடம் பெற்றிருந்தார். இவரது பூர்வீகம் அப்போதைய ஆந்திர மாநிலம், *பெல்லாரி* ஆகும். தற்போது *கர்நாடகத்தில் உள்ளது*


*வீரமிகுந்தவர்* என்ற பொருளை தெலுங்கில் உணர்த்தும் *கெட்டி பொம்மு* எனும் சொல் நாளடைவில் கட்ட பொம்மு என்று மாறி பின் தமிழில் *கட்ட பொம்மன்* என்ற சொல்லாயிற்று. ஜெகவீர பாண்டியனின் மறைவிற்குப் பின் அரச கட்டிலில் ஏறிய கட்ட பொம்மு பின் *ஆதி கட்ட பொம்மன்* என்று மக்களால் அழைக்கப் பட்டார். *இவரே பொம்மு மரபினரின் முதல் கட்ட பொம்மன்.!*


இந்த பொம்மு மரபில் வந்தவர்களே ஜெகவீர கட்டபொம்மன், ஆறுமகத்தம்மாள் தம்பதியர்.


இவர்களுக்கு *ஜனவரி 3, 1760* அன்று *பாஞ்சாலங் குறிச்சி*'யில் பிறந்தவர் *வீரபாண்டியன்* எனும் இயற்பெயர் கொண்ட *வீரபாண்டிய கட்ட பொம்மன்* ஆவர்.


இவர் நாயக்க வம்ச அரசாட்சியில் தொடர்ந்து வருவதால் இவர் *பொம்மு நாயக்கர்* என்று மக்களால் அழைக்கப்பட்டார்.


*பிப்ரவரி 2, 1790* அன்று *47ஆவது தலைமுறை*'யாக, தனது *30ஆவது வயதில் பாளையக்காரராக அரியணை ஏறுகிறார்* இவரது துணைவியார் *வீரசக்கம்மாள்.* இவர்களுக்குப் பிள்ளைப் பேறு இல்லை.


குமாரசாமி என்ற *ஊமைத்துரை, துரைச்சிங்கம்* என்ற இரு சகோதரர்களும், *ஈசுவரவடிவு, துரைக்கண்ணு* என்ற இரு *சகோதரிகளும்* இருந்தனர்.


*இவர் 9 ஆண்டுகள், 8மாதம், 14 நாட்கள் அரசுப் பொறுப்பிலிருந்தார்.!*


கிபி *17*'ம் நூற்றாண்டில், பாளையக்காரர்களாக தன்னாட்சி பெற்றாலும், *72 பாளையங்களை உள்ளடக்கிய பாஞ்சாலங்குறிச்சியே சிறந்து விளங்குகிறது.!*


இந்தியாவில் ஆங்கிலேய ஆட்சி உள்நுழைகிறது. *அளவுக்கதிகமாக கடன் வாங்கிய நவாபுகள் நேரிடையாக வரி வசூல் செய்யும் உரிமையை ஆங்கிலேயர்களுக்கு வழங்குகின்றனர்.* இதில் மற்ற பாளையக்காரர்கள் சரணாகதி ஆகிவிட, வரிதர மறுத்து எதிர்ப்பவர் *கட்டபொம்மனும்* இவருக்கு சில காலங்கள் முன்பு *பூலித்தேவரும் தான்.!* (இவர் தான் தமிழ் நாட்டில் மட்டுமல்ல *அன்றைய அகண்ட பாரத சுதந்திரப் போராட்ட வரலாற்றிலேயே ஆங்கிலேயரை எதிர்த்த முதல் சுதந்திர போராட்ட வீரர்.!*)


பாஞ்சாலங் குறிச்சியைத் தேடி, மன்னனை சந்திக்க‌ நெல்லையிலிருந்து வருகிறார், *ஆலன்.* ஆலனை எதிர்த்து தன்மானத்துடன் முழங்குகிறார், *வீரபாண்டிய கட்டபொம்மன்.* பாஞ்சாலங்குறிச்சியின் கோட்டைச் சுவர்களில் இன்னமும் எதிரொலிக்கிறது, அந்தக்குரல்.!


சாமாதான பேச்சு வார்த்தைக்காக, ஆங்கிலேயர்கள் அழைக்க, *ராமநாதபுரம், சேதுபதி அரண்மனையில் ஜாக்சனை காணச் செல்கிறார், கட்டபொம்மன்.* அங்கும் வரி, வட்டியைப் பற்றிய பேச்சுவர *ஜாக்சனை எதிர்க்கிறார் கட்டபொம்மன்.* மன்னரை சிறை பிடிக்க உத்தரவிடுகிறான் ஜாக்சன்.


வீரபாண்டிய கட்டபொம்மன், வாளால் பகைவரை வீழ்த்தி பாஞ்சாலங்குறிச்சிக்கு வருகிறார். வந்த பின்னரே, *தானாபதியை காணாமல் திகைக்கிறார்,* மன்னர். தானாபதி, சேதுபதி அரண்மனையிலே ஆங்கிலேயர்களிடம் மாட்டிக் கொண்டு விடுகிறார்.


சிலநாட்களில், தானாபதி விடுதலை செய்யப்பட்டு பாஞ்சாலங்குறிச்சிக்கு வருகிறார். *ஆங்கிலேயர்கள், வரியாக சேர்த்து வைத்திருந்த நெற்களஞ்சியத்தைக் கொள்ளையிடுகிறார்.*


இது, ஆங்கிலேயர்களை இன்னமும் கோபமூட்டியது. *ஆங்கிலேயரை பழி வாங்க தானாபதி வகுத்த இந்த வஞ்சகம், கட்டபொம்மனை தலைகுனிய வைத்தது.!*


இந்த *தானாபதி பிள்ளை* தான் *வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு அமைச்சராக மட்டுமல்ல* அவர் தூக்கிலிடப்பட்ட பின்னரும் *பல குறு நில மன்னர்களுக்கும் ராமநாதபுர சேதுபதி தொண்டைமான் வாரிசுகளுக்கும் சுதந்திர வேட்கையை உயிரூட்டி* சுதந்திரப் போராட்டத்தின் வேள்வித்தீயை அணையாமல் பார்த்துக்கொண்டவர்.!


〰️ ☘️ 🌺 ☘️ 🌺 ☘️ 〰️

பானர்மேன் தலைமையில், பீரங்கிப்படையுடன் ஆங்கிலேயரின் ஐந்து வகைப் படைகள் பாஞ்சாலங்குறிச்சியை சுற்றி வளைக்கின்றன. இது எதிர்பாராத போர் என்றாலும், பாஞ்சாலங் குறிச்சியின் வீரர்கள், எதிரிகளின் பலத்தைக் கண்டும் அஞ்சாமல் கோட்டையின் மீது நின்று போர் புரிகின்றனர். கவண்கற்களாலும், வேல்களலும் போரில் வெற்றி பெறுகின்றனர்.


(இந்தகோட்டையை, தகர்ப்பது பற்றிய *பானர்மேனின் ப்ளூபிரிண்ட் இன்றும் லண்டன் ஆவண காப்பகத்தில் இருக்கிறது.!*)


வீரன் வெள்ளையத்தேவன், இந்த போரில் தான் இறந்துபோகின்றான். ஆங்கிலேயர் பக்கத்திலும் நாசமே விளைகிறது. பாஞ்சாலங்குறிச்சி கோட்டையும் பாதிப்படைகிறது.


*போரில் இறந்த வெள்ளைத் தளபதிகளுக்கு, ஒட்டப்பிடாரத்தில் கல்லறையும், நினைவுச் சின்னமும் எழுப்பி உள்ளனர். எதிரிகளுக்கு நினைவுச் சின்னம் எழுப்பிய கட்ட பொம்மனின் பண்பு.! ஆங்கிலேயர் படைப்பிரிவினரிடையே அவருக்கு ஒரு மரியாதையை பெற்றுத்தருகிறது.!*


இதன் பிறகே, கட்டபொம்மனின் தலைக்கு விலை வைக்கப் படுகிறது. கோட்டையிலிருந்து தப்பித்து *விஜயரகுநாத தொண்டைமானின் அரண்மனையை அடைகிறார்,* கட்டபொம்மன்.


கோட்டையை கைப்பற்றுகின்றனர், ஆங்கிலேயர்கள். கோட்டையில் நாட்டப்பட்ட ஆங்கிலேயரின் கொடியை உடைத்து வீரச் சாவடைகிறார், *சுந்தரலிங்கம்* என்ற வீரர்.


குறிப்பு இந்த வீரன் *சுந்தரலிங்கம்* பெயரை *விருதுநகரை மையமாகக் கொண்ட போக்குவரத்து கழகத்திற்கு வைத்ததினால் தான்.?* 90'களின் இறுதியில் தென் மாவட்டங்களில் இனக் கலவரங்கள் ஏற்பட்டு பிறகு ~பல்வேறு பெயர்களில் இயங்கி வந்த போக்குவரத்து கழகங்கள் அனைத்திலும் பெயர் நீக்கப்பட்டு~, *தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம்* என்ற *பொதுவான பெயர் கொண்ட நிறுவனமாக இயங்கி வருகிறது.!*


〰️ ☘️ 🌺 ☘️ 🌺 ☘️ 〰️


தொண்டைமானின் அரண்மனையிலோ, ஆங்கிலேயரின் நயவஞ்சகத்தால் கட்டபொம்மன் எதிரிகளிடம் காட்டிக் கொடுக்கப் படுகிறார். ஒப்புக்கு ஒரு விசாரணை வைத்து,


*கயத்தாறில் நெடுஞ்சாலை பகுதியின் புளியமரத்தின் தூக்குக்கயிறை சுருக்கி, வாழ்வை முடித்துக் கொண்டார்.!* மற்ற பாளையக்காரர்கள் எல்லாரும் வெறுமே பார்த்திருக்க, *வணங்காமுடியாக உயிர்துறந்தார் கட்டபொம்மன்.!*


அதன்பின் இவரது தம்பி *ஊமைத்துரை சூளுரைத்து இரண்டாம் முறையாக கோட்டையை கட்டுகிறார்.* இதைப்பற்றி, வரலாற்றில் படித்திருப்போம். முட்டையையும், வெல்லத்தையும், சுண்ணாம்பையும் கொண்டு ஆறே நாட்களில் ஏழாயிரம் வீரர்கள் எழுப்பிய கோட்டையென்று!

மெக்காலே போர் தொடுத்து, கட்டபொம்மனின் சகோதர்களை, ஏராளமான பாஞ்சாலங்குறிச்சி வீரர்களையும் அழித்தொழிக்கின்றர். ஊமைத்துரை, மருது சகோதர்களுடன் சேர்ந்து விடுகின்றார்.


போர் வரலாறு:


ஆங்கிலயர் கி.பி.1793 இல் கப்பம் கேட்டனர். கி.பி.1797 இல் முதன் முதலாக ஆங்கிலேய அதிகாரி ஆலன் துரை பாஞ்சாலங் குறிச்சிக் கோட்டைக்கு வந்தார்.


1797 - 1798இல் நடந்த முதல் போரில் வீர பாண்டிய கட்டபொம்மனிடம் ஆலன் துரை தோற்று ஓடினார். அதன் பின்னர் நெல்லை மாவட்டக் கலெக்டர் ஜாக்சன் வீரபாண்டிய கட்டபொம்மனைச் சந்திக்க அழைத்தார். கட்ட பொம்மனை அவமானப் படுத்த நினைத்து வேண்டு மென்றே பல இடங்களுக்கு அலைக் கழித்தார்.


இறுதியில் 10, 1798 இல் ராமநாதபுரத்தில் சந்தித்தார். அப்போது தந்திரத்தால் வீரபாண்டிய கட்டபொம்மனைக் கைது செய்ய முயன்றார். அதை முறியடித்து வீரபாண்டியக் கட்டபொம்மன் பாஞ்சாலங் குறிச்சியை வந்தடைந்தார்.


செப்டம்பர் 5, 1799 இல் பானர்மென் என்ற ஆங்கிலேயத் தளபதியால் பாஞ்சாலங் குறிச்சி கோட்டை முற்றுகை யிடப்பட்டது. அங்கு கடும் போர் நடைபெற்றது.


போரில் பல ஆங்கிலேயர்கள் உயிரிழந்தனர். இருப்பினும் கோட்டை வீழ்ந்து விடும் என்ற நிலையில் வீரபாண்டிய கட்டபொம்மன் கோட்டையை விட்டு வெளியேறினார்.


செப்டம்பர் 9, 1799இல் ஆங்கிலேயர்களால் பாஞ்சாலங் குறிச்சி கோட்டை கைப்பற்றப் பட்டது.


அக்டோபர் 9, 1799 இல் புதுக்கோட்டை மன்னர் *விஜயரகுநாத தொண்டை மானால் வீரபாண்டிய கட்டபொம்மன் கைது செய்யப்பட்டு* கும்பினியாரிடம் (கிழக்கு இந்திய கம்பெனி) ஒப்படைக்கப்பட்டார்.


அக்டோபர் 16,1799இல் ஆங்கிலேயத் தளபதி பேனர்மேன் ஆணைப்படி கயத்தாற்றில் தூக்கிலிடப்பட்டார்.


கயத்தாறில், கட்டபொம்மன் உயிர் நீத்த இடத்தில் ஒரு *நினைவுச் சின்னம்* இருக்கிறது.

அவரை, *தூக்கு மாட்டிய புளியமரம் பட்டு போயிற்று.*


*வீரபாண்டிய கட்டபொம்மன் தூக்கிலடப்பட்ட சம்பவமானது* அந்நாளில் மக்கள் மனது களில் நீங்காத நினைவாக படிந்து விட்டதால் *பின்னாளில் அதை தெருக்கூத்து நாடகங்களாக நடத்தி வந்திருக்கின்றனர்* அவற்றை வைத்து சில *வரலாற்று ஆசிரியர்கள்* கீழ்க்கண்டவாறு அந்த நிகழ்வை விவரிக்கின்றனர்.!


பேனர்மேன் தான் ஏற்கனவே திட்டமிட்டபடி கட்டபொம்மனுக்கு தூக்கின் மூலம் மரண தண்டனை விதித்திட வேண்டுமென்ற தீர்ப்பினை எழுதி, அத்துடன் இந்தத் தண்டனை இன்றைய தினத்திற்குள் நிறைவேற்றப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டார். உடனிருந்த மற்ற வெள்ளை அதிகாரிகள் அங்கிருந்து எழுந்து சென்றார்கள். உடனடியாக கும்பெனிப் படையினரும், கும்பெனியின் விசுவாச ஊழியர்களும் கட்டபொம்மனை பொறுப்பேற்றுக் கொண்டார்கள். திட்டமிட்டபடி தூக்குத் தண்டனையை நிறைவேற்றிடத் தயாரானர்கள்.


கட்டைப் புளியமரத்தில் ஏற்கனவே தூக்கு மரமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த மரத்தடிக்கு கட்டபொம்மனை அழைத்துச் சென்றார்கள். ஒரு படை வீரன் மரத்தின் மீது ஏறினான். ஒரு கிளையிலிருந்து ஒரு கயிற்றைக் கட்டி அந்த முடிச்சை கீழே தொங்க விட்டான். மற்றொரு வீரன் ஒரு சிறிய ஏணிப்படியை அந்த தொங்கும் கயிற்றுக்கு அருகில் தள்ளி வைத்தான். தற்காலிகமாகச் செய்யப்பட்ட அந்த ஏணியின் ஐந்து படிகளில் கட்டபொம்மன் ஏறிச் சென்றார். நினைவுகளில் தன்னை மறந்தவராக, தொண்டையை கனைத்துக் கொண்டு தன்னைச் சுற்றிலுமிருந்த கூட்டத்தை கடைசியாகப் பார்வையிட்டார் கட்டபொம்மன். அதன் பின் அந்த தூக்கு முடிச்சைக் கையிலெடுத்து தனது கழுத்தை அதற்குள் தானே செலுத்திக் கொண்டார். வெள்ளைக்காரர்களுடன் சுதேசி வீரர்களும் கட்டபொம்மனைச் சுற்றி பேச்சற்ற நிசப்தமாக நின்று கொண்டிருந்தனர்.


கட்டபொம்மன் இறுதியாக மிகுந்த சப்தமிட்டு *"ஓ! முருகக் கடவுளே"* என்று திருச்செந்தூரின் முருகனை நோக்கிக் கூறிவிட்டு, தன் கீழுள்ள படியைத் தானே உதைத்துத் தள்ளினார். கழுத்து நெறிக்கப்பட்டு, கயிறு கழுத்தைச் சுற்றி இறுகியது. இரண்டு மனி நேரம் தொங்கிய உடல் இரண்டு மணிநேரம் எல்லோரும் பார்க்கும் வண்ணம், கட்ட பொம்மனது உடல் அந்த மரத்தில் தொங்கியது.


முந்தைய இரவில் கட்டபொம்மனுடன் சிறையிலிருந்த தம்பி *ஊமத்துரை*'யும், அவரது சொந்தப் பணியாளரும் கட்டபொம்மனின் இறுதிக்கிரியைகள் செய்வதற்காக அழைத்து வரப்பட்டார்கள். அருகிலிருந்த இடிந்து போன ஒரு கோயிலுக்குப் பக்கத்தில் காய்ந்து போன மரக்கிளையில் ஒரு பெரிய நெருப்பு உண்டாக்கப்பட்டது.


39 வயது நிரம்பிய தங்களது தலைவனுக்காகக் காத்துக் கொண்டிருந்த அந்தக் கூட்டத்திலிருந்த ஆண்களும், பெண்களும் அழுது கொண்டிருந்தார்கள். சுற்றியிருந்த கூட்டத்தினர் தலைவணங்க நின்று கொண்டிருக்க *கட்டபொம்மனது உயிரற்ற உடல் எரியூட்டப்பட்டது.!*


வீரமங்கை *ஆர்க்ஜோன்* பதினைந்தாம் நூற்றாண்டில் *வெள்ளையரை எதிர்த்து வீரப்போர் புரிந்த பிரெஞ்சு தேச வீர மங்கை.!*


*ஆர்க் ஜோனை* மக்கள் அறிய பொது இடத்தில் உயிரோடு தீ வைத்துக் கொளுத்திய வெள்ளையர்,


அன்று *கயத்தாற்றில் தூக்கிலிட்டு உயிர் பிரிந்த கட்டபொம்மனது உடலுக்கும் வெள்ளையர்கள் கொள்ளி வைத்தனர்.!*


அன்று மூண்ட தீ, நூற்றி ஐம்பது ஆண்டுகள் கழித்து அவர்களை அழிக்கும் ஊழித்தீயாக சுதந்திரத் தீபமாக ஜொலிக்கப் போகிறது என்பதனை அப்போது இறைவனைத் தவிர எவர் தான் அறிந்திருக்க முடியும்.?


*மீண்டும் எழுந்த பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டை.!*


கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்டதோடு பாஞ்சாலக் குறிச்சியின் வரலாறு முடிந்து விடவில்லை. ஆங்கிலேயர்களால் பாளையங்கோட்டைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த கட்டபொம்மனின் சகோதரர் ஊமைத்துரை பிப்ரவரி 02, 1801இல் பாஞ்சாலக் குறிச்சி வீரர்களால் மீட்கப்பட்டார். பாஞ்சாலக் குறிச்சிக் கோட்டைக்குப் புத்துயிர் கிடைத்தது. ஊமைத்துரையைக் கைது செய்ய வந்த மேஜர் மெக்காலே கோட்டையினுள் செல்ல முடியாமல் திரும்பினார். அவர் தலைமையில் ஒரு பெரும்படை மார்ச் 30, 1801இல் கோட்டையை முற்றுகையிட ஆரம்பித்து, மே 24, 1801இல் அதனைக் கைப்பற்றியது. அங்கிருந்து தப்பித்து, காளையார் கோவில், விருப்பாட்சி, திண்டுக்கல், பிரான்மலை என்று ஓடிய ஊமைத்துரையும் அவர் தம்பி துரைசிங்கமும் கைது செய்யப்பட்டு பாஞ்சாலங்குறிச்சி பீரங்கி மேட்டில் தூக்கிலிடப்பட்டனர். பாஞ்சாலங்குறிச்சி என்கிற பெயரையே தமிழகத்தின் வரைபடத்திலிருந்து நீக்கினர் வெள்ளையர். கோட்டை முற்றிலும் தகர்க்கப்பட்டுத் தரைமட்டமாக்கப்பட்டது.


1974 ஆம் ஆண்டு பாஞ்சாலங்குறிச்சியில் பழங்காலத்துக் கோட்டையின் வடிவினை ஒத்த ஒரு கோட்டையினை அப்போதைய தமிழக முதல்வராக இருந்த மு. கருணாநிதி எழுப்புவித்தார். அது இன்றளவும் வீரபாண்டியனின் புகழ்பாடி நிற்கிறது. கோட்டை, கொத்தளம், கொலுமண்டபம், ஜக்கம்மா தேவி ஆலயம் அனைத்தும் மீண்டும் தோன்றின. நினைவுக் கோட்டையை உள்ளடக்கிய 6 ஏக்கர் பரப்பினைச் சுற்றி மதில் சுவர் எழுப்பப்பட்டுள்ளது. உள்ளே தொல்பொருள் ஆய்வு மையமும் உள்ளது. மண்டபத்தின் உள்ளே கட்டபொம்மனின் வீரவரலாறு ஓவியங்களாகத் தீட்டப்பட்டுள்ளன. இக்கோட்டை 1977 முதல் சுற்றுலாத் துறையின் பராமரிப்பில் இயங்கி வருகிறது.



தற்போது 35 ஏக்கர் பரப்பிற்கு மேல் உள்ள பழைய கோட்டையின் அடிப்பகுதிக் கட்டிடங்கள் தொல் பொருள் ஆய்வுத் துறையின் பராமரிப்பின் கீழ் உள்ளன. கட்டபொம்மன் பயன்படுத்திய ஆயுதங்கள், அவர் காலத்து மக்கள் பயன்படுத்திய பல்வேறு பொருட்கள், அணிகலன்கள் நாணயங்கள் போன்றவை தொல் பொருள் ஆய்வுத் துறையினரால் கண்டெடுக்கப்பட்டுச் சென்னையில் தமிழ்நாடு அரசு அருங்காட்சியகத்தில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.!







No comments:

Post a Comment