Saturday, May 30, 2026

தலைச்சுற்றல்

 ❗️​"தலைசுத்துது... பிறசர் குறைஞ்சு போய்ற்று" என்று உப்புத் தண்ணீர் குடிப்பார்கள்...  

-ஆனால் தலைச்சுற்று எப்போதும் குறைந்த இரத்த அழுத்தம் (Low BP) மட்டுமே அல்ல!

⚠️மருத்துவ ரீதியாகப் பார்த்தால் தலைச்சுற்றலுக்குப் பின்னால் இன்னும் பல முக்கியமான காரணங்கள் ஒளிந்திருக்கலாம்.

⭕️மருத்துவமனைக்கு வருவோரில் கிட்டத்தட்ட கால்வாசி பேர் சொல்லும் மிக முக்கியமான மற்றும் பொதுவான புகார் இந்த "தலைசுற்றல்" (Dizziness )

தான்.


❗️தலைசுற்றல் என்பது ஒரு தனிப்பட்ட நோய் அல்ல; அது உடலில் உள்ள ஏதோ ஒரு குறைபாட்டின் அறிகுறி மட்டுமே.


🧠 👁👂நமது உடல் நேராகவும் சமநிலையாகவும் (Balance) இருக்க மூளை, கண்கள், மற்றும் உள் காது (Inner ear) ஆகிய மூன்றும் ஒன்றாக வேலை செய்ய வேண்டும். இதில் எங்கு பிரச்சனை என்றாலும் தலைச்சுற்றல் வரும்.


​1️⃣ உள் காது பிரச்சனைகள் (Inner Ear Issues)

🔸️​நம் காதின் உட்பகுதியில் தான் உடலின் சமநிலையை கட்டுப்படுத்தும் திரவமும் சிறிய படிகங்களும் (Crystals) உள்ளன.

🔸️​சில சமயம் இந்த காது படிகங்கள் தங்களை அறியாமல் இடம்மாறிவிடுகின்றன (BPPV என்ற பாதிப்பு). அல்லது காது நரம்பில் வைரஸ் தொற்று ஏற்பட்டுவிடுகிறது.

​🔸️இதனால் மூளைக்கு தவறான சிக்னல்கள் சென்று, நாம் அமைதியாக அமர்ந்திருந்தாலும் நம்மைச் சுற்றியுள்ள உலகம் அல்லது அறை அப்படியே சுழல்வது போன்ற உணர்வு (வேற்ரைகோ - Vertigo) ஏற்படுகிறது.


​2️⃣மூளைக்கு இரத்த ஓட்டம் குறைதல் 

🔸️​நமது மூளை சரியாக வேலை செய்ய அதற்குத் தொடர்ச்சியான இரத்த ஓட்டமும் ஒக்ஸிஜனும் தேவை.

​🔸️நீங்கள் படுக்கையிலோ அல்லது நாற்காலியிலோ இருந்து சட்டென்று வேகமாக எழும்போது, புவியீர்ப்பு விசையினால் இரத்தம் கால்களை நோக்கிச் சென்று மூளைக்குச் செல்லும் இரத்தம் சில நொடிகள் குறையலாம். -ORTHOSTATIC HYPOTENSION.

 🔸️அல்லது உடலில் இரத்தம் குறைவாக (Anemia - இரத்த சோகை) இருக்கலாம்.


​🔸️மூளைக்கு ஒரு சில நொடிகள் இரத்தம் குறைவாகச் செல்லும்போது, கண் இருட்டுவது போன்றோ அல்லது மயக்கம் வருவது போன்றோ ( Lightheadedness) இருக்கும்.


3️⃣நீர்ச்சத்து மற்றும் சர்க்கரை அளவு குறைதல் (Dehydration / Low Sugar)

​🔸️ வெயிலில் அதிகம் அலைந்து தண்ணீர் குடிக்காமல் இருப்பது (Dehydration) அல்லது நீண்ட நேரம் சாப்பிடாமல் இருப்பது (Low Blood Sugar).

​🔸️உடலில் தண்ணீர் குறையும் போது இரத்த அழுத்தம் (BP) குறையும். சர்க்கரை அளவு குறையும் போது மூளைக்கான சக்தி குறையும். இந்த இரண்டு நிலைகளிலும் உடல் பலவீனமடைந்து தலைச்சுற்றல் ஏற்படும்.


4️⃣இதயத் துடிப்பு சீரற்றதாக இருத்தல் (Heart Arrhythmia)

▪️​இதயம் மிக மெதுவாகத் துடித்தாலோ (Bradycardia) அல்லது மிக வேகமாகத் துடித்தாலோ (Tachycardia), மூளைக்குச் செல்லும் இரத்தத்தின் அளவு திடீர் திடீரெனக் குறையும். இதனால் நோயாளிக்குச் சட்டென்று தலைசுற்றி, "தரை நழுவுவது போல" அல்லது மயக்கம் வருவது போல இருக்கும்.


​5️⃣கழுத்து எலும்பு மற்றும் நரம்பு பாதிப்பு (Cervical Spondylosis)

​🔸️கழுத்துப் பகுதியில் உள்ள எலும்புகள் தேய்ந்து அங்கிருக்கும் நரம்புகளையோ அல்லது மூளைக்குச் செல்லும் இரத்தக் குழாய்களையோ அழுத்தும்போது, தலைச்சுற்றல் மற்றும் தலைப்பாரம் போன்ற உணர்வு ஏற்படும். குறிப்பாகத் தலையைத் திருப்பும்போது இது அதிகமாகும்.


6️⃣ஒற்றைத் தலைவலி சார்ந்த தலைச்சுற்றல் (Vestibular Migraine)

🔸️​பலரும் migraines அல்லது ஒற்றைத் தலைவலி என்றால் கடுமையான தலைவலி மட்டும்தான் வரும் என்று நினைக்கிறார்கள். 

🔸️ஆனால், சிலருக்கு தலைவலியே இல்லாமல் வெறும் தலைச்சுற்றல் மட்டும் வரலாம்.

​🔸️மூளையில் ஏற்படும் நரம்பியல் மற்றும் இரத்தக் குழாய் மாற்றங்களால், உள் காதுக்குச் செல்லும் சமிக்ஞைகள் பாதிக்கப்படும். இதனால் சில மணி நேரங்கள் முதல் சில நாட்கள் வரை தொடர்ந்து ஒருவித தலைச்சுற்றல் உணர்வு நீடிக்கும்.


​7️⃣மருந்துகளின் பக்கவிளைவுகள் (Medication Side Effects)

▪️️​சில நோய்களுக்காக நாம் சாப்பிடும் மாத்திரைகளே கூட தலைச்சுற்றலை ஏற்படுத்தலாம்.

​▪️️குறிப்பாக உயர் இரத்த அழுத்தத்திற்கான மாத்திரைகள் (Anti-hypertensives), தூக்க மாத்திரைகள், மன அழுத்தத்திற்கான மருந்துகள் (Antidepressants) மற்றும் சில வீரியமிக்க வலி நிவாரணிகள் இரத்த அழுத்தத்தைக் குறைத்தோ அல்லது மூளையின் செயல்பாட்டைச் சற்று மந்தமாக்கியோ தலைச்சுற்றலை உண்டாக்கலாம்.


​8️⃣கண்கள் மற்றும் பார்வைத் திறன் குறைபாடு (Vision Problems)

🔸️️​கண்களின் பார்வைத் திறன் திடீரென மாறுபடும் போது அல்லது தவறான வலு கொண்ட கண்ணாடி (Wrong power glasses) அணியும் போது, மூளைக்குக் கிடைக்கும் காட்சித் தகவல்களில் குழப்பம் ஏற்படும். 🔸️இதனால் புதிய கண்ணாடிகள் அணியும் ஆரம்ப நாட்களில் பலருக்கும் லேசான தலைச்சுற்றல் இருக்கும்.


​9️⃣தீவிர மன அழுத்தம் மற்றும் பயம் (Anxiety and Panic Attacks)

▪️​மனநலமும் தலைச்சுற்றலும் நேரடியாகத் தொடர்புடையவை.

​கடுமையான பயம் அல்லது பதற்றம் (Panic ▪️attack) ஏற்படும் போது, மனிதர்கள் அறியாமலேயே வேகமாக மூச்சு விடுவார்கள் (Hyperventilation). இதனால் இரத்தத்தில் உள்ள கார்பனீரொக்ஸைட் அளவு குறைந்து, மூளையின் இரத்தக் குழாய்கள் சுருங்கி தலைச்சுற்றலை ஏற்படுத்தும்


​🔟காதுக்குள் நீர் சுரப்பது / அழுத்தம் மாறுபடுதல் (Meniere's Disease)

🔸️​இது உள் காதில் ஏற்படும் ஒரு குறிப்பிட்ட வகை பாதிப்பு.

​🔸️நம் உள் காதில் உள்ள ஒருவகையான திரவம் (Endolymph) வழக்கத்தை விட அதிகமாகச் சுரந்து அழுத்தம் ஏற்படும் போது இந்த நோய் வரும். இதனால் திடீரெனக் கடுமையான தலைச்சுற்றல் வருவதோடு, காதில் 'உஸ்ஸ்' என்று ரீங்காரச் சத்தம் (Tinnitus) கேட்கும், கேட்கும் திறனும் தற்காலிகமாகக் குறையும்.


‼️எனவே, தலைச்சுற்றல் ஏன் ஏற்படுகிறது என்ற துல்லியமான காரணத்தைக் கண்டறிந்து, அதற்கான சரியான சிகிச்சையைப் பெறும்போது அது முற்றிலும் குணமாகலாம்.


‼️தலைச்சுற்றலோடு சேர்ந்து பின்வரும் அறிகுறிகள் இருந்தால் அலட்சியப்படுத்தாமல் உடனே அவசர சிகிச்சை பெற வேண்டும்:

▪️​திடீரென பேச்சு குளறுவது அல்லது முகம், கை, கால் மரத்துப்போவது (பக்கவாதத்தின் அறிகுறியாக இருக்கலாம்).

▪️​கடுமையான தலைவலி மற்றும் வாந்தி.

​நெஞ்சு வலி அல்லது மூச்சுத்திணறல்.

▪️​நடப்பதில் தடுமாற்றம் அல்லது மயங்கி விழுதல்.


​#தலைச்சுற்றல் 

 #உடல்நலம்  #மயக்கம் #Dizziness #Vertigo

No comments:

Post a Comment