Monday, October 2, 2023

பல்லக்கு தூக்கிகள்

 


முருகன் ஊரில் ஒரு பெரிய செல்வந்தர். மிகவும் உதவும் குணம் உடையவர். எங்கு சென்றாலும் பல்லக்கில் தான் செல்வார். இதற்காகவே எட்டு உடல் வலிமையுடைய ஆட்களை தெரிவு செய்து பல்லக்கு தூக்கிகளாக வேலைக்கு வைத்திருந்தார். நேர நேரம் சத்தான உணவு கொடுத்து வந்தார் முருகன். சத்தாக உண்டு வேலை நேரம் போக மீதி நேரத்தில் ஓய்வெடுத்து  வலிமையை ஏற்றி வைத்திருந்தனர் அவ்வெட்டு பெரும்.
ஒரு நாள் முருகன் பக்கத்து ஊரில் நடக்கும் நண்பரின் குடும்ப விழாவிற்கு பல்லக்கில் சென்றிருந்தார். திரும்பும் வழியில் ஒரு பசு மாடு தன் கன்று குட்டியை காணவில்லை என்று தவித்து கத்திக் கொண்டிருப்பதை கண்டார். மேலும் பயணத்தை தொடராமல் பல்லக்கை அங்கேயே ஒரு மரத்தடியில் இறக்கும் படி கட்டளை இட்டார் முருகன்.  பல்லக்கு தூக்கிகளை கூப்பிட்டு அந்த பசுவின் கன்றை தேடுமாறு கூறினார்.  அதற்கு பல்லக்கு தூக்கிகள் தங்களால் அது  முடியாது என்றனர். மேலும் பல்லக்கு தூக்குவது மட்டுமே தங்கள் வேலை, பிற வேலைகளை தங்களால் செய்ய முடியாது என்று மறுதலித்தனர்.
சிறிது யோசித்தார்  செல்வந்தர் முருகன். பின் சரி பல்லக்கை தூக்குங்கள் என்றார். இங்கிருந்து கிழக்கு நோக்கி செல்லுங்கள் என்றார் முதலில். செல்லும் பாதையில் கண்ணும் கருத்துமாக கன்றுகுட்டி எங்காவது கண்ணில் புலப்படுகிறதா என்று தேடினார். ஒன்றும் புலப்படவில்லை. மீண்டும் புறப்பட்ட இடத்திற்கே பல்லக்கை திருப்புங்கள் என்றார். அங்கிருந்து மேற்கு நோக்கி செல்லுங்கள் என்று கட்டளை இட்டார். போகும் வழியெல்லாம் வாஞ்சையாக கன்றுக்குட்டியை தேடினார். இத்திசையிலும் கன்று புலப்படவில்லை. மீண்டும் புறப்பட்ட இடத்திற்கே பல்லக்கை திருப்புங்கள் என்றார். அங்கிருந்து தெற்கு திசை நோக்கி செல்லுங்கள் என்று கட்டளை இட்டார். இங்கும் வழியெங்கும் கன்று கண்ணுக்கு அகப்படவில்லை.
ஒவ்வொரு திசையாக மாறி மாறி பல்லக்கை தூக்கி சென்ற பல்லக்கு தூக்கிகள் சோர்வடைந்தனர். ஐயா நாங்கள் கன்றை தேட மாட்டோம் என்று சொன்னதற்காக இப்படி எங்களை பழி வாங்குகிறீர்களா என்று வினவினர். நாங்கள் அனைவரும் சோர்வடைந்து விட்டோம் என்றனர். என்னப்பா இப்படி சொல்கிறீர்கள் உங்களுக்கு கஷ்டம் தரக் கூடாது என்று தான் முதலில் கன்றை தேடி கொண்டு வாருங்கள் என்று கூறினேன். நீங்கள் தான் குறிப்பிட்ட வேலையை தவிர மற்ற வேலைகளை செய்ய இயலாது என்றீர்கள். பிறகு தானே நானே தேட புறப்பட்டு விட்டேன், இதென்ன இதற்கு இப்படி கூறுகிறீர்களே  என்றார் பதிலுக்கு.
சரி எல்லா பக்கமும்  தேடி விட்டோம் மீண்டும் புறப்பட்ட இடத்திற்கே பல்லக்கை திருப்புங்கள் என்றார் முருகன். அங்கிருந்து வடக்கு  திசை நோக்கி செல்லுங்கள் என்று கூறினார். இங்கு ஒரு வழியாக தாய் பசு தொலைத்த கன்று கண்ணுக்கு அகப்பட்டது. மிகவும் மகிழ்ச்சியடைந்த முருகன் கன்றுக்குட்டியை  தாய் பசுவிடம் சேர்த்து வைத்தார்.
இப்பல்லக்கு தூக்கிகள் முருகன் சொல்வதை முதலிலேயே கேட்டு திசைக்கு இரண்டு பேராக கன்றை தேடி சென்றிருந்தால் எவ்வளவு சுலபமாக கன்றை தேடி கண்டு பிடித்திருக்கலாம். தேவை இல்லாமல் இதை செய்ய மாட்டேன் அதை செய்ய மாட்டேன் என்று பேசி கஷ்டப்பட்டு பல்லக்கையும் தூக்கி சுமந்துகொண்டு தேடும் அவலத்திற்கு ஆளாகி இருக்க மாட்டார்கள் அல்லவா?
நம்மைச் சுற்றி இருக்கும் வேலைகளில் சூழ்நிலைக்கேற்ப நம்மால் இயன்ற அனைத்து வேலைகளையும் நாம் திறம்பட செய்யவேண்டும். அது எனது வேலை இல்லை, இது எனது வேலை இல்லை என்று தட்டி கழிக்கலாகாது. அப்படி தட்டி கழித்தால் அதில் சில வேலைகள் பெரிய சுமையாக மீண்டும் நம் தலையிலே விழும்.

                                                                                                                                                                       

Veerapandian.K

Assistant Professor/Mech

www.pandianprabu.weebly.com

No comments:

Post a Comment