Monday, November 13, 2023

கடவுளுக்கு நன்றி-பத்து நாட்கள் முடியட்டும்

 ஒரு பிச்சைக்காரன். கோவில் வாசலில் பிச்சையெடுப்பது அவனது வழக்கம். நல்ல குரல் வளத்துடன் பாடுவான்.

ஒரு நாள். பக்திப் பாடல்களை உருக்கமாக பாடிக்கொண்டிருந்தான். மகிழ்ந்துபோன கடவுள் அவன் முன் தோன்றினார். பிச்சைக்காரன் மகிழ்ந்துபோனான். வணங்கினான். கடவுள் பேசினார்.
‘பக்தா! உன் பக்தி என்னை கவர்ந்தது. உனக்கு ஏதாவது வரம் தர விரும்புகிறேன். என்ன வேண்டும் என்று கேள்!’ என்றார் கடவுள்
பிச்சைக்காரனுக்கு மகிழ்ச்சி.
‘கடவுளே மிக்க நன்றி. என்னுடைய வேண்டுதல் இன்றுதான் பலித்திருக்கிறது. நீங்கள் இரண்டு வரங்கள் அளிக்க வேண்டும்’ என்று வேண்டினான் பிச்சைக்காரன்.
‘சரி. தருகிறேன்’ என்றார் கடவுள்
‘எனக்கு இந்த பிச்சைக்கார வாழ்க்கை வெறுத்துப் போய்விட்டது. அதனால், முதலாவது வரத்தினால் என்னை இந்த நாட்டிலேயே பெரிய பணக்காரனாக மாற்றிவிடுங்கள்’ என்று கேட்டான்.
‘அப்படியே ஆகட்டும். இரண்டாவது வரத்தை கேள்’ என்றார் கடவுள்.
‘கடவுளே! இத்தனை காலம் எல்லோரும் பணக்காரர்களாக இருந்தார்கள். நான் ஏழையாக இருந்தேன். அதனால், இரண்டாவது வரத்தினால், இந்த நாட்டு மக்கள் அனைவரையும் ஏழையாக்கிவிடுங்கள்’ என்று கேட்டான்.
கடவுள் சிரித்துக்கொண்டே, ‘அப்படியே ஆகட்டும்’ என்று சொன்னார்.
பிச்சைக்காரனுக்கு மகிழ்ச்சி. கடவுளுக்கு நன்றி தெரிவித்தான்.
‘பக்தா! நீ கேட்ட வரங்களை வழங்கிவிட்டேன். ஆனால் ஒரு நிபந்தனை. இந்த வரங்கள் பத்து நாட்களுக்கு மட்டுமே நீடிக்கும். நாளை காலை விடியும்போது நீதான் இந்த நாட்டின் பெரிய பணக்காரன்’ என்று சொல்லிவிட்டு மறைந்தார் கடவுள்.
‘பத்து நாட்களுக்கு மட்டும் வரம் கொடுக்கும் இவரெல்லாம் ஒரு கடவுளா’ என்று வருத்தப்பட்டுக்கொண்டே நகர்ந்தான். இருந்தாலும் அவனுக்கு மகிழ்ச்சி.
அன்று இரவு முழுவதும் தூங்கவேயில்லை. சில்லறைக் காசுகளை சேமித்துவைக்கும் பெட்டியை திறந்து பார்த்தான். பத்து செப்புக்காசுகளே இருந்தது.
‘இன்றோடு நம் பிரச்னைகள் தீர்ந்தது. விடிந்ததும் பெட்டி நிறைய தங்கக் காசுகள் நிரம்பி வழியப்போகிறது. வசதியான வீடு ஒன்று வாங்க வேண்டும். குதிரையும், தேரும் வாங்க வேண்டும்’ என்றெல்லாம் கணக்குப் போட்டான். எப்பொழுது விடியும் என்று காத்திருந்தான்.
பொழுது விடிந்தது.
வேகமாக எழுந்து பெட்டியை திறந்து பார்த்தான். அதிர்ந்துபோனான். பெட்டியில் முதல் நாள் இருந்த அதே பத்து செப்புக்காசுகளே இருந்தது.
‘கடவுள் நம்மை ஏமாற்றிவிட்டாரா?’ என்று யோசித்தவாறு வீட்டுக்கு வெளியே வந்தான். நாடெங்கும் ஒரே பரபரப்பு. காரணம், ஒரே நேரத்தில் நாட்டில் இருந்த அனைவரின் பணம், ஆபரணங்கள் ஆகியவை காணாமல் போயிருந்தன. பிச்சைக்காரனுக்கு விஷயம் புரிந்தது. ‘நாட்டில் இருப்பவர்களிடம் ஒரு பைசாகூட இல்லை. அதனால், பத்து செப்புக்காசுகள் வைத்திருக்கும் தானே பணக்காரன்’.
ஆம், பிச்சைக்காரன் பணக்காரன் ஆனான்.
விடிந்ததும் வீட்டில் பணமழை பெய்யும் என்று நினைத்த பிச்சைகாரனுக்கு வருத்தமே மிஞ்சியது. தற்போது கிடைத்திருக்கும் இந்த பணக்கார பட்டத்தால் அவனுக்கு எந்த உபயோகமும் இல்லை. கோவில் வாசலுக்கு சென்று பிச்சை எடுக்கவும் வழியில்லை. காரணம் மக்களிடம் பணம் இல்லை.
அவன் யோசிக்கத் தொடங்கினான்.
‘நல்ல வேளை பத்து நாட்களில் மக்களிடம் பணம் வந்துவிடும். பிறகு நமக்கு பிச்சை கிடைக்கும். ஒருவேளை இதுவே நிரந்தரமாக இருந்தால் நம் நிலை என்னவாகும்? தப்பித்தேன். கடவுளுக்கு நன்றி’ என்றவாறு பத்து நாட்கள் முடியட்டும் என்று காத்திருந்தான்

No comments:

Post a Comment