Monday, November 13, 2023

உன் மாட்டைத் திருடியவன் உன் பின்னால்தான் நிற்கிறான்

 காட்டுப் பகுதியில் உள்ள தன் வீட்டில் ஒரு விவசாயி மாடு ஒன்றை வளர்த்து வந்தார். ஒரு நாள் அந்த மாடு காணாமல் போய்விட்டது. மாடு காணாமல் போய்விட்டதே என விவசாயி கவலையில் வருந்தினார். அந்த மாட்டைத் திருடிச் சென்றவனைப் பழிவாங்க வேண்டும் என்று ஆத்திரத்தில் துடித்தார்.

மாடு காணாமல் போனது பற்றிக் கடவுளிடம் முறையிட்டார் விவசாயி. அப்போது கடவுள் அங்கு வந்தார். கடவுள் உனக்கு என்ன உதவி வேண்டும் என்று கேட்டார்.
ஆத்திரத்தில் அந்த விவசாயி கடவுளிடம், “நான் ஆசையாக வளர்த்த மாட்டை யாரோ திருடிச் சென்று விட்டார்கள். அந்த மாட்டைத் திருடியது யாராக இருந்தாலும் அவனை உடனே இங்கே வரவழைக்க வேண்டும்” என்று உதவி கேட்டார்.
அதற்குக் கடவுள், “பக்தனே, அந்த மாடு உனக்கு வேண்டுமா? அதை நான் உனக்குத் திருப்பித் தருகிறேன். ஆனால், மாடு காணாமல் போனதற்குக் காரணமானவர்கள் யார் என்று கேட்காதே” என்றார்.
ஆனால் விவசாயி கேட்கவில்லை. “கடவுளே! நான் ரொம்பவும் கோபத்தில் இருக்கிறேன். மாட்டைத் திருடியவனைப் பழிவாங்கினால்தான் என் மனம் ஆறும். அதனால், திருடியவனை இங்கு வரவழையுங்கள்” என்று மீண்டும் பிடிவாதமாகக் கேட்டார்.
“சரி, நீ கேட்கின்ற வரத்தைத் தருகிறேன். ஆனால், பின்னர் நீ வருத்தப்படக் கூடாது” என்றார். அந்த விவசாயி அதற்கு ஒத்துக்கொண்டார்.
“ இதோ நீ கேட்ட வரத்தைப் பிடி. மாட்டைத் திருடிச் சென்றவன் உன் பின்னால் நிற்கிறான், பார்” என்று விவசாயியிடம் கூறினார் கடவுள்.
உடனே கோபத்தில் விவசாயி திரும்பிப் பார்த்தார். புலி ஒன்று அங்கே நின்று கொண்டிருந்தது. புலியைப் பார்த்தவுடன் பழிவாங்கும் கோபம் மாயமாய் மறைந்தது. உயிர் பயம் கவ்விக்கொண்டது. “அய்யோ கடவுளே காப்பாற்று!” என்று அலறியடித்துக்கொண்டு ஓட்டம் பிடித்தார் விவசாயி.

No comments:

Post a Comment