Monday, November 13, 2023

இந்த நிலமும் இருந்தது. கடவுளும் இருந்தார்.

 ஒரு துறவி தன் பயணத்தில் ஒரு ஊருக்கு வந்தார்.

அப்போது நன்பகல். கடுமையாய் வெயில் அடித்துக் கொண்டிருந்தது. அந்த ஊரில் கடுமையான வறட்சி.

துறவிக்கோ கடுமையான தண்ணீர் தாகம். அலைந்து பார்த்தும் எங்கும் நீர் கிடைக்கவில்லை.

அப்போது ஒரு இளைஞன் தன வயலில் கிணற்றிலிருந்து நீர் இறைத்துக் கொண்டு இருந்ததைக் கண்டு அங்கு விரைந்து அவனிடம் குடிக்கத் தண்ணீர் கேட்டார்.

அவனும் தண்ணீர் கொடுக்க அவருக்கு தாகம் தீர்ந்தது.

அவர் இளைஞனிடம், “தம்பி,நீ கொடுத்து வைத்தவன். ஊரே வறட்சியின் பிடியில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கும் போது, உன் நிலம் மட்டும் பசுமையாக இருக்கிறது. உன் கிணற்றில் மட்டும்தான் நீர் இருக்கிறது. கடவுளின் முழுமையான அருள் உனக்கு இருக்கிறது” என்றார்.

இளைஞன் சொன்னான்,

“அய்யா, வந்த வழியில் பார்த்திருப்பீர்கள். இந்த ஊரில் நிலம் எல்லாம் பாறையாக இருக்கிறது. இந்த இடமும் அப்படித்தான் இருந்தது. இரவு பகலாய்க் கடுமையாய் உழைத்து இந்த நிலத்தைச் சீர்திருத்தி அதன் பலன் இப்போதுதான் கிடைத்திருக்கிறது. அப்படி நான் உழைத்ததன் பலனை, சாதாரணமாக வெறும் கடவுளின் அருள் என்று சொல்லி விட்டீர்களே!”

துறவி, “தம்பி, உன் உழைப்பு என்பதெல்லாம் உண்மைதான். இருந்தாலும், கடவுள் அருள் இல்லாமல் உன் கிணற்றில் தண்ணீர் ஊறி உன் வயலில் விளைச்சல் வந்திருக்குமா?” என்று கேட்டார்.


அதற்கு அந்த இளைஞன், “அய்யா, நான் இங்கு வருவதற்கு முன்னும் இந்த நிலமும் இருந்தது. கடவுளும் இருந்தார். நான் இங்கு வராமல் கடவுள் மட்டும் இருந்த போது இந்த நிலத்தைப் பார்க்கச் சகிக்கவில்லையே!” என்றான்.

துறவிக்குப் பதில் சொல்ல முடியவில்லை.

No comments:

Post a Comment