Thursday, November 2, 2023

ஜெகதீச சந்திர போஸ்-வரலாற்றுக் குறிப்பு

 பிறப்பு: நவ. 30, 1858

இறப்பு: நவ. 23, 1937

ஜெகதீச சந்திர போஸின் பல சாதனைகள் நமக்கு ஊக்கமும் பெருமிதமும் அளிப்பனவாகும்.

அறிவுசார் சொத்துரிமை (இன்டலக்சுவல் பிராப்பர்ட்டி) குறித்து இப்போது உலக அளவில் பேசப்படுகிறது. புதிய கண்டுபிடிப்புகள், புதிய வணிகத் தயாரிப்பு, புதிய உற்பத்தி முறை, புதிய இலக்கியம் உள்ளிட்டவற்றை உருவாக்குபவர், தனக்கும் தனது நாட்டுக்கும் உலக அளவில் பெறும் அங்கீகாரம் இது.

எழுத்தாளர்களுக்கு பதிப்புரிமையாகவும் (காப்பிரைட்), வணிக நிறுவனங்களுக்கு வர்த்தகச் சின்னமாகவும் (டிரேட் மார்க்) கண்டுபிடிப்புகளுக்கு காப்புரிமையாகவும் (பேடன்ட்) அறிவுசார் சொத்துரிமை விளங்குகிறது. இவற்றை வைத்திருப்போருக்கு, பயனாளிகள் குறிப்பிட்ட காலத்துக்கு கட்டணம் செலுத்த வேண்டும் என்பது நியதி.

இந்த விஷயத்தில் இந்தியா மிகவும் பின்தங்கியுள்ளது. நமது கவனக்குறைவால், பல்லாயிரம் ஆண்டுகளாக பாரம்பரிய மருத்துவத்தில் நாம் பயன்படுத்தும் வேம்பு, மஞ்சள் ஆகியவற்றுக்கு அமெரிக்க நிறுவனம் ஒன்று காப்புரிமை பெற்றதும், அதனால் ஏற்பட்ட சர்ச்சையும் நினைவிருக்கலாம்.

பொதுவாகவே நமது நாட்டில் ஆராய்ச்சித் துறையில் கொடுக்கப்படும் கவனம் குறைவு. எனவே, புதிய கண்டுபிடிப்புகளுக்காக காப்புரிமை பெறுவதில் நாம் பின்தங்கியே இருக்கிறோம். சமீபகாலமாகத் தான் அறிவுசார் சொத்துரிமை தொடர்பான விழிப்புணர்வு நம் நாட்டில் பெருகி வருகிறது.

இந்தக் குறைபாட்டை முதலில் போக்கியவர், தாவரங்களுக்கும் உயிருண்டு என்று, தான் கண்டறிந்த ‘கிரஸ்கோகிராப்’என்ற கருவியால் நிரூபித்த விஞ்ஞானி ஜெகதீச சந்திர போஸ்.

காப்புரிமை

1904-ஆம் ஆண்டு, தனது ‘மின் குறுக்கீடுகளைக் கண்டறிதல்’ என்ற ஆய்வு முடிவை அமெரிக்காவில் பதிவு செய்து, அதற்கு காப்புரிமை (யுஎஸ்755840ஏ) பெற்ற போஸ், அதன்மூலம், ‘இந்தியாவின் முதல் காப்புரிமை பெற்ற விஞ்ஞானி’ என்ற பெருமையைப் பெற்றார். அவர் காப்புரிமை பெற்றதே ஒரு சுவையான வரலாறு.

கிரெஸ்கோகிராப்

கொல்கத்தாவின் மாநிலக் கல்லூரியில் இயற்பியல் பேராசிரியராகப் பணியாற்றிய போஸ், தீவிர அறிவியல் ஆய்வுகளிலும் ஈடுபட்டார். வளிமண்டலத்திலுள்ள மின்காந்த அலைகள் குறித்த ஆராய்ச்சி தொடங்கிய காலகட்டம் அது. இந்த அலைகளின் நீளத்தைக் குறைத்தால் தகவல் தொடர்பில் பயன்படுத்த முடியும் என்று போஸ் கூறினார். ஆனால் அதை நிரூபிப்பதற்கான ஆராய்ச்சி வசதியும் நிதி வசதியும் போஸிடம் அப்போது இல்லை.

1893-இல் ஐரோப்பிய விஞ்ஞானியான நிக்கோலா டெஸ்லா, மின்காந்த (ரேடியோ வேவ்ஸ்) அலைகளின் இருப்பை நிரூபித்தார். அப்போது போஸின் கருத்து உண்மையானது.

அடுத்த ஆண்டில் (1894 நவம்பர்), அலைநீளம் குறுக்கப்பட்ட மின்காந்த அலைகளின் பயன்பாட்டை கொல்கத்தா நகர்மன்ற அரங்கில் துணைநிலை ஆளுநர் வில்லியம் மெக்கன்ஸி முன்னிலையில் நிரூபித்துக் காட்டினார் போஸ்.

வெடிமருந்தை எரியச் செய்து, அதன் தூண்டலால் குறைந்த அலைநீள மின்காந்த அலைகளைப் பயன்படுத்தி, எந்தத் தொடர்பு ஊடகமும் இன்றி தொலைவிலிருந்த மணியை இயங்கச் செய்தார் போஸ்.

அதற்கு அப்போது ‘கண்ணுக்குத் தெரியாத ஒளி’ என்று பெயரிட்ட போஸ், ‘இந்த ஒளி (மின்காந்த அலை) சுவர்களையும் கட்டடங்களையும் கூட ஊடுருவும். இதன் உதவியால் கம்பியில்லாத் தொலைதொடர்பு எதிர்காலத்தில் சாத்தியமாகும்’ என்றார்.

மின்காந்த அலைகளைக் கவரும் குறைக்கடத்தி (செமி கண்டக்டர்) குறித்த பல உண்மைகளை போஸ் கண்டறிந்தார். அவை தற்போது பயன்பாட்டிலுள்ள என்-பி-என் (டிரான்சிஸ்டர்) என்ற மின்னணுவியல் கண்டுபிடிப்புக்கு அடிப்படையாக இருந்தன.

கிறிஸ்டல் ரேடியோ டிடெக்டர்

மின்காந்த அலைகளின் பயன்பாட்டைக் கண்டறிந்த போஸ் அதனை தனது அறிவுசார் சொத்தாகப் பதிவு செய்வதை விரும்பவில்லை. அறிவியல் கண்டுபிடிப்புகளை சுயநலத்துடன் பதிவு செய்வது கூடாது; அது உலகைச் சுரண்டுவதாகும் என்று அவர் வாதிட்டார். ஆனால் இந்தத் தத்துவமே வானொலியின் (ரேடியோ) இயக்கத்துக்கு அடிப்படை. அதே ஆண்டில் வானொலியை இயக்கி அதற்கு காப்புரிமமும் பெற்ற இத்தாலியரான மார்க்கோனி அதற்கான பெரும் புகழை அடைந்தார்.

கம்பியில்லாத் தகவல் தொடர்பு சாதனம் தயாரிக்கும் வெளிநாட்டு நிறுவனம் ஒன்று போஸை அணுகி, அவரது கண்டுபிடிப்புகளைப் பயன்படுத்திக்கொள்ளும் உரிமைக்காக பெருமளவில் பணம் தருவதாகக் கூறியபோதும் அவர் அதை ஏற்கவில்லை. தனது கண்டுபிடிப்புகளால் உலகம் நன்மை அடையுமானால், யார் வேண்டுமானாலும் எந்தக் கட்டுப்பாடும் இன்றி அதைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றார் அவர்.

ஆனால், போஸின் நெருங்கிய நண்பரும், சுவாமி விவேகானந்தரின் பிரதம சிஷ்யையுமான சகோதரி நிவேதிதை, அவரது கருத்தை ஏற்கவில்லை. அறிவுசார் சொத்துரிமையின் முக்கியத்துவம் குறித்து போஸிடம் விவாதித்து அவரது மனதை மாற்ற முயன்றார் நிவேதிதை.

இந்நிலையில் தான், ‘மின் குறுக்கீடுகளைக் கண்டறிதல்’ என்ற ஆராய்ச்சி முடிவை போஸ் 1901-இல் வெளியிட்டார். அப்போது போஸின் நலம் விரும்பிகளும், சாரா சாப்மன் புல் என்ற அமெரிக்க விஞ்ஞானியும் தொடர்ந்து வற்புறுத்தியதால், தனது ஆராய்ச்சி முடிவை உலக அளவிலான காப்புரிமை நிறுவனத்தில் பதிவு செய்து, 1904 மார்ச் 29-இல் காப்புரிமை பெற்றார் போஸ். அதுவே முதல் இந்திய காப்புரிமை என்ற சிறப்பைப் பெற்றது.

வங்க விஞ்ஞானியான ஜெகதீச சந்திரபோஸ், இயற்பியல், உயிரியல், தாவரவியல், தொல்லியல், வங்க இலக்கியம் எனப் பல துறைகளில் முத்திரை பதித்திருக்கிறார். கொல்கத்தாவில் 1917-இல் இவர் நிறுவிய போஸ் ஆராய்ச்சிக் கழகம் இன்றும் பல விஞ்ஞானிகளை உருவாக்கி வருகிறது.

No comments:

Post a Comment