Tuesday, November 7, 2023

பொம்மலாட்டம்

 


நோக்கம்

பொம்மலாட்டம் ஒரு பொழுதுபோக்கு காட்சிகலை ஆகும். இதன் மூலம் நல்ல கருத்துகளை அறிவிக்கலாம். சிறிது காலமாக நல்ல கருத்துக்களை தெரிவிக்கும் வகையில் பொம்மலாட்டம் வளர்ச்சியடைந்து உள்ளது. இன்றைய காலகட்டத்தில் இது ஒரு பொழுதுபோக்கு காட்சியாக இல்லாமல் கல்வியறிவு புகட்டுபவர்களும், மாணவர்களும் நல்ல செய்திகளை பரப்புவதற்கு பயன்படுத்துகின்றனர். பொம்மலாட்டம் ஒருவருடைய கற்பனை மற்றும் அவர்களுடைய படைப்பு திறனை வெளிகொணர்கிறது. மற்ற எல்லா கலைகளைவிடவும் பொம்மலாட்டம், குறைந்த நேரம் கதை நிகழ்ச்சியமைப்பு வண்ணம் மற்றும் இயக்கம் கொண்டவை. மேலும் அதிக செலவில்லாத ஒரு கலை வடிவமாகும்.

பழங்காலத்தில், பேரரசர்கள், அரசர்கள் மற்றும் பெரும் வீரர்கள் ஆகியோர் அரசியல் கேடு மற்றும் கோளாறுகளின் சீர்திருத்த நோக்கங்கொண்ட நையாண்டித் தாக்குதல் போன்றவற்றை பொம்மலாட்டத்தின் மூலம் தெரியப்படுத்தினர்.

தென்னிந்தியாவில்தான் சமயசார்புள்ள பொம்மலாட்டம் வளர்ச்சியடைந்து இராமாயணம், மஹாபாரதம் போன்ற கதைகளை நிழல் பொம்மலாட்டத்தின் மூலம் காட்டப்பட்டன. தற்காலத்தில், நவீன வளர்ச்சியின் காரணமாக பெரும்பாலான பரம்பரிய பொம்மலாட்ட அரங்கங்கள் தன்னிலை இழந்துவிட்டன. ஆயினும் இக்கலை மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் செய்தி தொடர்பாளர்களிடமும் பொம்மலாட்டம் பிரசித்தி பெற்றுள்ளன.

காற்று, நிலம், நீர் ஆகியவற்றை பாதுகாப்பதின் முக்கியத்துவம் பற்றியும், அறிவியல் வளர்ச்சி மற்றும் கலை,  பற்றியும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்ச்சியையும் பொம்மலாட்டத்தின் மூலம் உண்டாக்கலாம்.

இம்முறை ஒருவருடைய படைப்பாற்றல், கதை எழுதுதல், கைப்பாவை செய்தல், வசனம், இசை ஆகியவற்றிற்கு வழி செய்கிறது. இவ்வகை ஆட்டம் பார்ப்பதற்கு மகிழ்ச்சியளிப்பதைவிட செய்யும் பொழுது சிறந்த அனுபவத்தைப் தருகிறது. பொம்மலாட்டத்தின் மூலம் பல கலைகளை ஒருங்கிணைத்து குறிப்பாக வரைதல், வண்ணம் பூசுதல், நறுக்குதல் மரவேலை, மரச்செதுக்குவேலை, மேடை அமைத்தல், உருப்படிவம் அமைத்தல் களிமண் சாந்தால் உருவம் செய்தல், நடிப்பு உடை தயார் செய்தல், களிமண் உருவம் செய்தல் மற்றும் மேடைக்கலை ஆகிய கலைகளை கற்றுக்கொள்ளலாம்.

பொம்மலாட்டம்

பொம்மலாட்ட வரலாற்று ஆசிரியர் கூற்றுப்படி சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்பிலிருந்து பொம்மலாட்டக்கலை மட்டுமே இருந்ததாகவும், அதன்மூலம் பேரரசர்கள் மற்றும் வீரர்களின் கதை சொல்லப்பட்டதாகவும் கூறுகின்றனர். சமய நோக்கிலான பொம்மலாட்டம் தென்னிந்தியாவில்தான் வளர்ச்சியடைந்தது. இவற்றில் மஹாபாரதம் மற்றும் இராமாயண கதைகளை நிழல் பொம்மலாட்டம் மூலம் காட்டப்பட்டன. தற்சமயம், தொன்றுதொட்டு இத்தகைய பொம்மலாட்டம் நடத்தும் குடும்பங்கள் ஆந்திர பிரதேசம், கர்நாடகம், கேரளம், ஒரிஸா மற்றும் தமிழ்நாட்டிலும் இருந்து வருகின்றனர்.

பெரும்பாலான பொம்மலாட்டக்காரர்கள் தாங்கள் தொன்றுதொட்டு நடத்திவந்த பழங்கதைககளைவிட்டு தற்போதய நிலைக்கேற்ப, வரதட்சணை கொடுமை, பால்ய திருமணம், பெண் சிசுவதை, குடும்பக்கட்டுப்பாடு ஆகியக் கருத்துகள் பொம்மலாட்டத்தில் இடம் பெற்றிருப்பதால் பார்ப்பவர்களின் விருப்பத்திற்கேற்ப புத்துயிர் பெற்று வருகின்றனர்.

பொம்மலாட்ட பொம்மையின் உருவத்தை அதை செய்யும் கலைஞனின் கற்பனை வளத்திலும், கலைத் திறனிலும் அமைக்கப்படும். சில பொம்மைகள் சிறியதாகவும் சில பொம்மைகள் ஜீவனுள்ளதாகவும் இருக்கும். இந்த பொம்மைகளை பகட்டாகவோ அலங்காரமில்லாமலோ செய்யலாம்.

நிழல் பொம்மைகள் தோலினால் செய்யப்பட்டு மென்மையான துளைகளிட்டு வண்ணம் பூசப்பட்டிருக்கும். பொதுவாக பெரிய அளவில் காணப்படும். உதாரணமாக இராவணன் பொம்மை மீட்டருக்கும் மேல் உயரம் உள்ளதாக இருக்கும். மேடையின் பின்புறம் பெரிய மிக மெல்லிய நேர்த்தியான மஸ்லின் துணி திரையை இரண்டு கழிகளுக்கு இடையே விரித்து கட்டிவிட்டு, பிறகு, அதன் பின்புறமாக வெளிச்சம் காட்டப்படும். இதுவே நிழற்பொம்மலாட்டத்தின் மேடையாகும்.

சூத்திரப்பாவை (அ) நூற்பாவை

சூத்திரப்பாவையின் கை கால், உடல் தலைப் பகுதிகள் ஒன்றாக இணைக்கப்பட்டவை. இப்பொம்மைகள் மரம் கம்பி, காகிதம், நூல், காகிதம் நிரம்பிய துணி, கந்தை கூளம் அல்லது மரத்தூள் ஆகியவை மூலம் செய்யலாம். இப்பாவையின் உடல், கை, கால் பகுதிகளில் கயிறு கட்டப்பட்டு அக்கயிற்றின் மறுமுனை பொம்மலாட்டக்காரனின் கையிலிருக்கும். பொம்மலாட்டக்காரன் தன் கையிலுள்ள கயிற்றை அங்க அசைவுகளுக்கேற்ப, தளர்த்தியோ அல்லது இறுக்கியோ திறமையாக இயக்க வேண்டும். இவ்வகை பொம்மையை இயக்க தனித்திறமை வேண்டும்.

சூத்திரப்பாவை பொம்மைகளை செயற்படுத்துவதற்கு பல வழிகள் உள்ளன. இப்பொம்மைகளை கையில் சொருகி முதல் விரலை தலைபாகத்திற்குள் விட்டு பொம்மையின் கைகளை கட்டைவிரல் மற்றும் சுண்டு விரலாலும் இயக்கலாம் அல்லது பொம்மையை கழியில் கட்டி கழி மற்றும் கைகளின் மூலமாக இயக்கலாம். இம்முறையில் பொம்மையின் இயக்கம் ஆட்டக்காரனின் கையில் இருக்க வேண்டும். அல்லது நிழல் பொம்மலாட்டமாகவும் காட்டலாம்.

தொன்றுதொட்டு தமிழ்நாட்டில் பொம்மையின் நூல்கள், பொம்மலாட்டக்காரனின் தலைப்பாகையில் கட்டப்படுவதால், கைகளால் பொம்மையின் கை கால்களை சுலபமாகவும் திறமையாகவும் இயக்க முடியும்.

பாவை செய்பவர்கள், கம்பி, மரம், காகிதம், துணி, தோல் மற்றும் மரக்கிளைகள் போன்ற இயற்கை பொருட்களை பயன்படுத்துகின்றனர். மூலப்பொருட்களைப் பொருத்து நல்ல பொம்மைகளை உருவாக்கலாம். மனித பாத்திரத்தோடு அல்லாமல், பானை, தட்டு மற்றும் தட்டுமுட்டுப் பொருட்கள் வீடு மற்றும் மரம், புஷ்பம், மீன், விலங்கு மற்றும் தெய்வத்தன்மையுள்ள பொருட்கள், மேலும் கற்பனை சக்தியால் சிங்க உடல், கழுகின் தலை, சிறகு கொண்ட விலங்கும், முதலை, பாம்பு, பறவை ஆகியவற்றின் தோற்றம்கொண்ட விலங்கு வேதாளம் போன்ற பொம்மைகளையும் காணலாம். நகைச்சுவை, கேலிக்கூத்து, கற்பனை ஆகியவற்றை பொம்மலாட்டக்காரன் இக்கலையின் மூலம் வெளிப்படுத்தலாம்.

தோல் பொம்மலாட்டம்

நிழல் பொம்மைகள் தோலினால் செய்யப்படுபவை. பொதுவாக, ஆட்டின் தோல் உபயோகப்படுத்தப்படுகிறது. இது முதன் முதலில் ஆந்திர பிரதேசத்தில்தான் தோன்றியது. தோல் பொம்மை 250 செ.மீ. அளவிலிருந்து 1 மீட்டர் அளவு உயரம் இருக்கும். இவ்வகை பொம்மலாட்டம் வெள்ளை துணி விரிப்பின் பின்புறமாக ஒளியின் உதவியுடன் காட்டப்படும் நிழலுருவமே நிழல் பொம்மலாட்டமாகும். பெரும்பாலும் இராமாயண, மஹாபாரத கதைகளையே நிழல் பொம்மலாட்டத்திற்கும் எடுத்துக்கொள்வர்.

ஆந்திரத்திலும், தமிழகத்திலும் பிரபலமடைந்துள்ள இந்த நிழல் பொம்மலாட்டம், பெரிய தோலிலான பொம்மைகளை கயிறுகளைக் கொண்டு இயக்கப்படுகின்றன. இசை, மத்தளம், புல்லாங்குழல் போன்ற இசைக்கருவிகளைக் கொண்டு இப்பொம்மலாட்டத்தை இனிமையாக்குகின்றனர்.

பொம்மலாட்டம், கல்வி மற்றும் தகவல் தொடர்பு சாதனம்

முக்கியச் செய்திகளை பொம்மலாட்டம் மூலமாக மக்களிடையே சென்றடைய செய்யலாம். மேடைப் பேச்சில் பழக்கமில்லாதவர்கள், கூட்டத்தைப் பார்த்து கூச்சமடையவர்கள், திரைக்கு பின்னால் இருந்து பேசலாம். அதேபோல, கருத்துக்களை வெளிப்படையாக சொல்ல முடியாதவர்கள் பொம்மலாட்டம் மூலம் செய்து காட்டலாம்.

பொம்மலாட்டம் பாடம் கற்பிக்கவும் உதவி புரிகிறது. வரலாற்று நாடக பாத்திரங்களை பொம்மலாட்டம் மூலம் எடுத்துரைக்கலாம். குழந்தைகளுக்கு எந்த ஒரு கருத்தையும் பொம்மலாட்டம் மூலம் கற்பிப்பதால், குழந்தைகள் எளிமையாக புரிந்து கொள்வர். அறிவியல், கணக்கு வரலாறு, கலாச்சாரம் மற்றம் கலை ஆகிய பாடங்களை பொம்மலாட்டம் மூலம் குழந்தைகளுக்கு எளிமையாக புரிய வைக்கலாம். இப்பொம்மலாட்டத்தின் மூலம் பாடம் நடத்துவது மிகவும் எளிது. மேலும், குழந்தைகள் மிக விருப்பத்தோடும், மகிழ்ச்சியோடும் கற்றுக்கொள்வர். ஆகவே, பொம்மலாட்டம் ஒரு வசீகர பாடம் புகட்டும் சாதனம் ஆகும்.

பொம்மலாட்டத்தின் நன்மை

பொம்மலாட்டம் முப்பரிமாண தன்மையுடன் கூடிய ஒலி ஒளி சாதனம்.

  1. பொம்மைப் பாவைகள் செலவு இல்லாமல் உபயோகமற்ற பொருட்களை கொண்டுச் செய்யலாம்.
  2. இது குழந்தைகளின் சிருஷ்டிக்கும் திறமையை வெளிக்கொணரும்.
  3. பொம்மலாட்டத்தை சாதாரணமாக வகுப்பறை சூழ்நிலையில்கூட பயன்படுத்தலாம்.
  4. இது ஒரு குழுவாகச் சேர்ந்து செய்யும்போது அவர்களிடத்திலே நட்புணர்ச்சியை உண்டாக்கும்.
  5. இது குழந்தைகளுடைய கவனத்தை அதிகப்படுத்தும்.
  6. இது மறைமுகமாக சரீர சம்பந்தமான வியாதியை குணப்படுத்த உதவுகிறது.
  7. பொம்மலாட்டம் மூலமாக குழந்தைகள் அவர்களுடைய ஆற்றலை வெளிப்படுத்தலாம் : உதாரணமாக படம் வரைதல், வர்ணம் பூசுதல், தையல் செய்தல், நடித்தல், பாடுதல் மற்றும் கைத்தொழில்கள் மூலம் தங்கள் ஆற்றலை வெளிப்படுத்த பொம்மலாட்டம் உதவுகிறது.

கதை வசனம் எழுதுதல்

ஒரு வகுப்பை பல பிரிவுகளாக பிரித்து ஒவ்வொரு பிரிவும் வசனம், பாட்டு மற்றம் இசையுடன் கூடிய சிறிய கதையை தயாரித்து பொம்மைப்பாவைச் சித்திரம் மூலம் மேடையில் நடிக்கச் செய்யலாம். பொம்மலாட்ட மரங்கள், உயிரினங்களை பாதுகாத்தல், நீர் ஒலி மற்றும் காற்று மாசுப்படுதல், பாலிய விவாகத்திலிருந்து பெண்களுடைய விடுதலை, வரதட்சணைக் கொடுமை, பெண் சிசுவதை சமுதாய ஒற்றுமை, மற்றும் சாதி முறைகளின் தீங்கு பற்றியதாக இருக்கலாம்.

கதையை எப்படி உருவாக்குவது ?

முதலில் நல்ல கருத்தை தேர்ந்தெடுத்து கொண்டு அக்கருத்திற்கேற்ப கதையை விரிவாக்கவும். தேர்ந்தெடுக்கப்பட்ட கதைக்கு தலைப்பையும் அதன் குறிக்கோளையும் கொடுக்க வேண்டும் கதையை நடத்தக்கூடிய நேரம் பார்வையாளர்களின் வயது ஆகியவற்றை மனதில் கொள்ள வேண்டும். எளிமையான, சுருக்கமான சுலபமான மொழியை பயன்படுத்தவும் மொழி காவியமாகவோ அல்லது இசையாகவோ இருக்க வேண்டும். எப்பொழுதும், பழக்கமில்லாத மொழியை பயன்படுத்தக் கூடாது.

ஆட்டத்திடல்

ஆட்டத்தின் ஒவ்வொரு காட்சிக்கும் ஒவ்வொரு அங்கமாக பிரித்தல் வேண்டும். ஒரு மரக்கட்டைக்குள் செயல்கள் நடைபெறுவதை விவரிக்க வேண்டும் (உதாரணமாக ஒரு குரங்கு மரத்திலிருந்து குதிப்பதுபோல) ஒவ்வொரு கதையிலும் முகவுரை, கருத்து அதாவது சாராம்சம் இறுதியில் அக்கதையின் முடிவு இருத்தல் அவசியம்.

செயல், நகைச்சுவை, அற்புதம், ஆச்சரியம் மற்றம் கற்பனை இவைகள் அனைத்தும் கலந்து அமைக்கப்படும் ஆட்டம் ஒரு நல்ல பொம்மலாட்டம் ஆகும்.

குழந்தைகளுக்கு பொம்மலாட்டத்தை கற்றுத்தருவது மூலம் அவர்களின் உள்ளார்ந்த திறமையை வெளிக்கொணர முடியும். இது ஒரு நயமான உற்சாகத்தை உண்டாக்கக்கூடிய சுலபமான வழிமுறையாகும்.

பொம்மலாட்டத்தின் வகைகள்

பொம்மலாட்டங்கள் - வரைபடத்தாள், பஞ்சு

  1. பிரம்பு கைத்தடி பொம்மலாட்டங்கள் - வரைபடத்தாள், பஞ்சு
  2. நிழல் பொம்மலாட்டங்கள் - தோல் அட்டை
  3. பொய்முக பொம்மலாட்டங்கள் - வரைபடத்தாள் தாள்தட்டு
  4. கையுறை பொம்மலாட்டங்கள் - பழைய கையுறைகள்

மூலப்பொருட்களின் பட்டியல்

  1. வரைபடத்தாள்
  2. பழைய வாழ்த்து அட்டைகள்
  3. பழைய தாள் உறை (பழுப்பு நிறம்)
  4. துணி துண்டுகள் (பிரகாசமான நிறமுள்ளவை)
  5. சாதாரண துணிகள் (வெள்ளை வெளிர் மஞ்சள் நிறம்) - 1/4 மீ
  6. ஏதாவது ஒரு சாதாரண அல்லது வண்ணம் தீட்டப்பட்ட பொருள் - 14 மீ 7. நீர் புகாத தாள்
  7. பழைய செய்தித்தாள்
  8. வர்ணங்கள் (சிகப்பு, பச்சை கருப்பு)
  9. வர்ணத் தூரிகை
  10. கத்தரிக்கோல்
  11. பசை
  12. ஊசி, நூல்
  13. செல்லோடேப்
  14. ரப்பர் பாண்ட்
  15. துடைப்பத்தின் அடிப்பாகம்
  16. சிறிய அளவுள்ள உருளைகிழங்கு - 1 டஜன்

கைப்பாவை

கைப்பாவைகளை வரைபடத்தாள், காய்கனிகள் மற்றும் கைக்குட்டை ஆகியவைகளைக் கொண்டு செய்யலாம். கைப்பாவைகள் செய்யவும் செயல்படுத்தவும் மிகவும் எளிதாக இருக்கும். இதில் மிக முக்கியமானவை கண்கள், மூக்கு மற்றும் காதுகள் ஆகும். கைப்பாவை மூலம் நாம் எந்த ஒரு கருத்தையும் சுலபமாக விளங்க வைக்கலாம்.

பிரம்புப்பாவை

இவ்வகைப் பாவைகளை பிரம்புகளைக் கொண்டு இயங்கச் செய்யலாம். ஆகவே, இதற்கு பிரம்புப்பாவை ஆட்டம் என்றழைக்கின்றனர். இதை பல கலைகளுக்குப் பயன்படுத்தலாம். இதன் மூலம் ஒரு விஷயத்தையோ அல்லது ஒரு குறிப்பிட்ட கருத்தைத் வெளிப்படுத்தலாம்

நிழற்பாவை ஆட்டம்

அட்டை அல்லது பழைய நோட்டுப் புத்தகத்தின் அட்டையைக் கொண்டு நிழற்பாவை செய்யலாம். இப்பொம்மைகளின் உறுப்புகளைக் கயிற்றால் பிரம்புடன் இழுத்துக்கட்டி, திரை மறைவில் இருந்து கொண்டு உரிய பிரம்புகளை இழுத்து பொம்மைகளை ஆடச் செய்யலாம். எந்த கருத்தையும் மையமாக வைத்து விளக்குகளின் உதவியுடன் நாடகத்தை திறமையாகச் செய்யலாம்.

முகமுடி

முகமூடி, பேப்பர் அல்லது வரைபடத்தாள் வைத்து செய்யலாம். விலங்குகளைப்பற்றிய கருத்தை விளக்க இவ்வகை முகமூடிப் பாவையை பயன்படுத்தலாம். இவை கேலிச்சித்திரமாகவோ ஜீவகளையுள்ளதாக இருக்கலாம். நாடகத்தில் ஒரு பாத்திரமேற்று நடிக்கக்கூடிய முகமூடியை பயன்படுத்தலாம்.

கையுறைப்பாவை ஆட்டம்

கையுறைப்பாவை, பழைய கால் அல்லது கையுறையில் பஞ்சை வைத்து அடைத்து அதில் காது. மூக்கு வாய் ஆகியவற்றை தைத்தோ அல்லது ஒட்டியோ பயன்படுத்தலாம். இவ்வகை பாவையை நிரந்தர பயன்பாட்டிற்கு பத்திரப்படுத்தி வைத்து கொள்ளலாம்.

பயன்படுத்தும் முறை

பாவைக்கூத்து வகுப்பறையில் ஒரு மாதத்திற்கு இரண்டு முறையாவது செய்யலாம்.

மொழிவன்மை மிகவும் எளிமையாக இருத்தல் அவசியம்.

    1. குழந்தைகள் வார்த்தைகளை புரிந்து கொள்ளும் அளவுக்கு எளிமையாக இருத்தல் நல்லது.
    2. உரையாடல் சுருக்கமாக இருக்க வேண்டும்.
    3. அணுகுமுறை நிச்சயமானதாக, உறுதியானதாக இருத்தல் வேண்டும். 5. வாய்மொழி நகைச்சுவை அல்லது செய்கையினால் கூடிய நகைச்சுவையாக இருத்தல் வேண்டும்.
    4. இவ்வகை ஆட்டம் ஐந்து நிமிடத்திற்குள் முடிவடைய வேண்டும்.
    5. மாணவ மாணவிகளின் தவறுகளை திருத்தி சொல்லித் தருவது அவசியம்.

ஆதாரம் : சி.பி.ராமாமி ஐயர் பவுண்டேசன்

No comments:

Post a Comment